வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (08/01/2018)

கடைசி தொடர்பு:20:20 (08/01/2018)

தெற்காசியப் போட்டியில் பங்கேற்பேனா? தேர்வாகியும் கால்பந்து வீரரை துரத்தும் ஏழ்மை

வலது கையில் மூன்று விரல்களை இழந்த பதினொன்றாம் வகுப்பு மாணவன் மெளலி பாலாஜி கடந்த மாதம் கோவாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் கலந்துகொண்டு 2ம் பரிசு பெற்றார். தற்போது நேபாளில் நடைபெறும்  மாற்றுத் திறனாளிகளுக்கான 12வது தெற்காசியக் கால்பந்துப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறார். அங்கு சென்று விளையாடி வர வசதியில்லாமல் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் படி ஏறியிருக்கிறார்.

இதைப்பற்றி  மெளலி பாலாஜியிடன் பேசியபோது, ''எங்க அப்பா பேரு புஷ்பநாதன், அம்மா வசந்தி. என் தம்பி மணிபாரதி. நாங்கள் இளம்பிள்ளை அருகே ஏழுமாத்தானூர் என்ற குக்கிராமத்தில் வசித்து வருகிறோம். அப்பா லாரி டிரைவராக இருக்கிறார். அவருடைய வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  நான் இளம்பிள்ளையில் உள்ள ஜோதி வித்யாலையா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். 7 வருடங்களுக்கு முன்பு கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடிக்கும்போது என் வலது கையில் உள்ள கட்டை விரல், ஆள் காட்டி விரல், நடு விரல் மூன்று சிதறிப் போய் விட்டது. தற்போது இரண்டு விரல்கள் மட்டுமே இருக்கின்றன. நான் சின்ன வயதிலிருந்தே கால்பந்து நன்றாக விளையாடுவேன். எனக்குப் பயிற்சியாளராக தினேஷ் அண்ணனும், உடற்பயிற்சி ஆசிரியர் தங்கதுரை சாரின் ஆலோசனை படி விளையாடி மாவட்ட, மாநில அளவில் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறேன்.

கடந்த மாதம் கோவாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட கால்பந்துப் போட்டியில் களத் தடுப்பாளராக இருந்து 2ம் பரிசை பெற்றேன். அதையடுத்து வரும் 13 முதல் 17ம் தேதி வரை நேபாளத்தில் 12வது தெற்காசிய மாற்றுத் திறனாளிகளுக்கான கால்பந்துப் போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட கால்பந்துப் போட்டி பிரிவில் இந்தியா சார்பாக கலந்துகொள்ள நான் தேர்வாகியிருக்கிறேன். அதற்கான சான்றும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கு சென்று வர 10 ஆயிரம் செலவு ஆகுமாம். அப்பா லாரி ஓட்டி 5 ஆயிரம் ரூபாய் புரட்டித் தருவதாகச் சொல்லியிருக்கிறார். இன்னும் 5 ஆயிரம் தேவைப்படுகிறது. அந்தத் தொகை இல்லாததால் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சேலம் கலெக்டரை சந்தித்து முறையிட வந்திருக்கிறேன். எனக்கு உதவி கிடைத்தால் பாரா ஒலிம்பிக் மாரியப்பன் அண்ணனைபோல தங்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்'' என்றார்.