வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (08/01/2018)

கடைசி தொடர்பு:20:01 (08/01/2018)

``போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கு அரசுதான் காரணம்” - கடலூரில் கொந்தளித்த ஜி.ராமகிருஷ்ணன்

``அரசு நிலுவைத் தொகையைக் கொடுப்பதற்குள் ஓய்வுபெற்ற தொழிலாளி செத்தே போவான்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் நடைபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், “கடந்த 2 ஆண்டு காலமாக ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள், தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை அரசு உடனடியாக வழங்க வெண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டுமென்று, இரு நீதிமன்றங்களும் பல தீர்ப்புகளை வழங்கின. ஆனால், இதுவரை மாநில அரசு அதைச் செயல்படுத்தவில்லை. 1,700 கோடி ரூபாய் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகையையும் பணியில் உள்ள தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5,300 கோடி ரூபாய் நிலுவைத் தொகையையும் உடனே வழங்க வேண்டும்,

நியாயமான ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை முன் வைத்து கடந்த ஓர் ஆண்டில் 23 முறை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்படியும் அரசு செவிசாய்க்காததால், கடந்த 4-ம் தேதி அனைத்து தொழிற்சங்களும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு சென்றன. ஆனால், தொழிற்சங்கங்களுடன் உருப்படியாகப் பேச்சு வார்த்தை நடத்துவதற்குப் பதிலாக ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடச் சொல்லியது அரசு நிர்வாகம். அனைத்துச் சங்கங்களும் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில உதவி சங்கங்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, தொழிலாளர்களுக்கு விரோதமான ஒப்பந்தத்தை அரசு திணிக்க முற்பட்டது. அதனால்தான் 1.30 லட்சம் தொழிலாளர்களும் கடந்த 4 நாள்களாக அமைதியான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பயிற்சி பெறாத ஓட்டுநர்களை வைத்துக்கொண்டு பேருந்துகளை இயக்கி வருகிறது மாநில அரசு. அதனால் தமிழகம் முழுக்க விபத்துகள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழக மக்களின் உயிரோடு அரசு விளையாடக் கூடாது.

ஜி.ராமகிருஷ்ணன்

தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்க நினைக்கக் கூடாது. நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து அந்தத் தொகையைத் தவணை முறையில் வழங்குவோம் என்று கூறுகிறார்கள். 1,700 கோடி ரூபாயைத் தவணை முறையில் வழங்குவதற்குள், ஓய்வுபெற்ற தொழிலாளி, செத்தே போய்விடுவான். அதனால் உடனடியாக நிலுவைத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழகம் முழுக்க போராடிவரும் தொழிற்சங்கங்களை அழைத்து அரசு உடனே பேச்சு வார்த்தை நடத்தி, சுமுகத் தீர்வைக் காண வேண்டும் என்பதுதான் இந்த ஆதரவுப் போராட்டத்தின் நோக்கம். போக்குவரத்துத் துறையைத் தனியார் மயமாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உயர் நீதிமன்றம் கருத்து கூறியதாக நான் நினைக்கவில்லை. அரசுத் துறையைக் கேள்வி கேட்டிருக்கிறார்கள். கோரிக்கையை வைத்து அடுத்த நாளே தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கவில்லை. ஒரு வருஷமாகக் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதனால் இந்தப் போராட்டத்துக்கு அரசுதான் காரணமே தவிர தொழிலாளர்கள் அல்ல” என்று முடித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க