குறைகளைக் கேட்காமல் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டிருந்த கோவில்பட்டி கோட்டாட்சியர்!

மக்களின் குறைகளைக் கேட்கமால் செல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டிருந்த கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதாவைக் கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வரும் காட்டுநாயக்கர் சமூக மக்களுக்குக் கடந்த சில வருடங்களாக சாதிச் சான்றிதழ் வழங்காமல் காலதாமதம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், சாதிச்சான்றிதழ் இல்லாமல் கல்விச் சலுகைகள், கல்வி உதவித்தொகை மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு விரைந்து சாதிசான்றிதழ் வழங்கக் கோரி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் காட்டு நாயக்கர் சமூகத்தினை சேர்ந்த மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோட்டாட்சியர் அனிதாவைச் சந்தித்து, மனு அளித்து தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். ஆனால், கோட்டாட்சியர் அனிதா அவர்கள் கூறுவதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தொடர்ந்து தனது செல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையெடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியேறிய அவர்கள், கோட்டாட்சியர் அனிதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

Protest in kovilpatti rdo office

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேசினோம். "காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்குச் சாதிச்சான்றிதழ் வழங்காமல் கோட்டாட்சியர் அனிதா காலம் தாழ்த்தி வருகிறார். விசாரணை செய்து சாதிச்சான்றுகளை வழங்கிடுமாறு கோட்டாட்சியருக்கு, மாவட்ட ஆட்சியர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே உத்தரவிட்டும், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இச்சாதிச்சான்று வேண்டி இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள், அவரது மேசையில் உறங்குகின்றன. இதுகுறித்து அளித்த மனுவை பெற்றுக் கொள்ளாமலும், நாங்கள் சொல்வதைக் கேட்காமலும் செல்போனில் வாட்ஸ் அப்பை பார்த்துக் கொண்டே இருந்தார். அவரது செயல் எங்களை உதாசினப்படுத்துவது போல இருந்தது. மக்கள் பிரச்னைகள் எல்லாவற்றிலும் துரித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவே இருந்து வருகிறார். வரும் 17-ம் தேதிக்குள் சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், 18-ம் தேதி முதல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்." என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!