வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (08/01/2018)

கடைசி தொடர்பு:22:40 (08/01/2018)

கல்வி உதவித் தொகை வேண்டி திருச்சியில் மாணவர்கள் போராட்டம்!

மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை சரிவர வழங்கப்படுவதில்லை என்று கூறி திருச்சி பெரியார், ஈ.வெ.ரா.கல்லூரியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் காஜாமலை பகுதியில் அமைந்துள்ளது, பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி. இக்கல்லூரியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர்கள் உயர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் தந்தை பெரியாரின் முயற்சியால் 1965-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் பக்தவச்சலம் தலைமையில் இக்கல்லூரி திறக்கப்பட்டது.

கிராமப்புற ஏழை மாணவர்கள் உயர் கல்வி பயிலவும், உயர் கல்வியில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையானது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.  இத்தொகையானது பருவக்கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கி வழங்கப்படுவதாகும்.

கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதில் பணம் கையாடல்கள் நடைபெறுகின்றன, இதனால் மாணவர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்ததன் காரணமாக, அதை தடுப்பதற்காக முறையான ஆணையம் அமைத்து அவர்களுக்கு சரிவர உதவித் தொகை கிடைக்கும் படியாக அரசு செய்து வந்தது. இந்நிலையில் மீண்டும் உதவித் தொகை கிடைப்பதில்  தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரிப் பருவம் ஆரம்பித்து 6 மாதங்கள் கடந்து தேர்வும் முடிவு பெற்ற நிலையில் கல்வி உதவித் தொகை கிடைக்கப்படவில்லை என்று ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களைச் சீண்ட வேண்டாம், தமிழகம் தாங்காது என்றும் உதவித் தொகை கையாடல் அரசின் இழிநிலையைக் குறிக்கிறது என்ற வாசகத்துடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பெரிதும் பரபரப்பானது. 

போராட்டத்தை கைவிடும்படியாக கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் காவல் துறை ஆய்வாளர், போலிஸார்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால்., உதவித் தொகை கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், இதற்கான முறையான உத்தரவு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று உத்தரவு அளித்ததன் பெயரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.  

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில் : ஒவ்வொரு முறையும் கல்வி உதவித் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை வைத்த பின்னர், காலம் கடந்து உதவித் தொகை கிடைக்கும். அதுவும் ஒரு சிலருக்குக் கிடைப்பதில்லை.

எங்களுக்கு உதவித் தொகை என்பது பருவக் கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் கட்டுவதற்கு பயன்பெறும் வகையில் அமைந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும். தேர்வு கட்டணம் கட்டாத நேரங்களில் எங்களை தேர்வுக்கு அனுமதிப்பதில்லை. இதனால் படிப்பும் பாதிக்கப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் பலரும் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்றனர்.

கிராமப்புற மாணவர்கள், ஆதிதிராவிட மாணவர்கள், சிறுபான்மையினர் உயர் கல்வியை பயில உதவித் தொகை என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. முறையான ஆணையம் அமைத்து மாணவர்களுக்கான உதவித் தொகை சரிவர கிடைக்க செய்யும் வகையில் தமிழகத்தின் கல்வித் தரம் நிச்சயம் உயரும்.