வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (08/01/2018)

கடைசி தொடர்பு:21:40 (08/01/2018)

மதுரை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடிய மக்கள்!

மதுரையில் உள்ளாட்சித் தேர்தல் வார்டு மறு வரையறை செய்த பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளிட்டது, அதில் குழப்பம் உள்ளதாகல் கூறி 19-வது வார்டு பொதுமக்கள் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்து, மாநிலத் தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டது. அதில் மதுரை 19-வது வார்டிலிருந்த காந்திஜி தெருவை, 67-வது வார்டில் இணைத்துள்ளனர். இதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும்போது குழப்பம் ஏற்படும் என்று அந்தப் பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால், அந்தத் தெருவைப் பிரிக்காமல் மறுவரையறை செய்த பட்டியலிலும் 19-வது வார்டில் காளிமுத்து தெரு, முத்துராமலிங்கத் தேவர் தெரு ஆகிய தெருக்களோடு சேர்த்து வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டரை். காந்திஜி தெருவை 67-வது வார்டிலிருந்து, மீண்டும் 19-வது வார்டில் சேர்க்காவிட்டால், வரும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், 19-வது வார்டு பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் எரியாத நிலையில் இருப்பதால், அந்தப் பகுதிகளில் சமூகவிரோதிகள், பல சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும், இந்த விவகாரத்தில் மாநகராட்சி விரைவாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.