வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (08/01/2018)

கடைசி தொடர்பு:22:00 (08/01/2018)

தேனியில் அதிகரித்து வரும் மணல் கொள்ளை! கலெக்டரிடம் முறையீடு

ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளக் கூடாது என்ற தடை உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் தேனி மாவட்டத்தில் பல இடங்களில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகிறார்கள்.

தேனி மாவட்டத்தில் வருசநாடு, கண்டமனூர், தேவாரம், பொட்டிபுரம் ஆகிய பகுதிகளில் இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக மணல் அள்ளப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு அனுப்பட்டு வருவதாகக் குற்றச்சாடு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில், "தேனி மாவட்டத்தில் முறையற்ற வகையில், மணல், கரம்பை, செம்மண், வண்டல்மண் போன்றவை அள்ளப்பட்டு வெளி மாவட்டங்களுக்குக் கடத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில் மண் அள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதா எனத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டபோது, அதற்கு பதிலளித்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சாம்பசிவம், தேனி மாவட்டத்தில் மணல் அள்ள யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என பதில் கொடுத்தார். ஆனால் 03-07-17 தேதியிட்டு ஒரு நபருக்கு மணல் அள்ள பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி மணல் கொள்ளையைத் தடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.