சுடுகாட்டுக்குப் பாதை வேணும்! - ஆட்சியர் அலுவலகத்தில் பாடைகட்டி நூதனப் போராட்டம்  

பெரியபூலாங்குளம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்குச் சாலை வசதி செய்துதரக் கோரி அந்தப் பகுதி மக்கள், மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பாடைகட்டி நூதனப் போராட்டம் நடத்தினர்.  

சுடுகாடு

மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் பஞ்சாயத்துக்குட்பட்ட  பெரிய பூலாங்குளம் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு  நீண்டகாலமாக பாதையோ, சாலை வசதியோ இல்லாத சூழல் இருந்து வருகிறது. அதனால் ஆற்றுக்காலில் இறங்கி மிகவும் சிரமத்துடன் சுடுகாட்டுக்குச் செல்லும் சூழல் இருப்பதாகப் புகார் கூறுகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். மயான சாலை அமைக்க பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பெரியபூலாங்குளம் கிராமத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பாடைகட்டி ஊர்வலமாக வந்து நூதன முறையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புக்கு நின்ற போலீஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தி, 5 பெண்கள் உட்பட 15 பேரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் சிலரிடம் பேசியபோது " எங்களுக்கு வீடு வேண்டும், விவசாயம் செய்ய நிலம் வேண்டும் என்று நாங்கள் முறையிடவில்லை. நாங்கள் செத்தால் எங்களைக் கொண்டு போக பாதைதான் கேட்கிறோம். எங்களின் நியாமான கோரிக்கைக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்க வேண்டும்’ என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!