வெளியிடப்பட்ட நேரம்: 23:20 (08/01/2018)

கடைசி தொடர்பு:23:20 (08/01/2018)

போகி திருநாளில் இவற்றை எரிக்காதீர்கள்: ராமநாதபுரம் ஆட்சியர் வேண்டுகோள்.

 

போகி திருநாளான்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பொருள்களைத் தீயிட்டு எரிக்காமல் சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போகி திருநாள் கொண்டாட்டம்

தமிழர்களின் பாரம்பர்ய பண்டிகையான பொங்கல் திருநாளுக்கு முதல் நாளினை போகி பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் பழையனவற்றை கழித்தல் என்ற வழக்கத்தின் அடையாளமாக கிழிந்த துணிகள், பழைய பாய்கள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாயக் கழிவுகளைத் தீயிட்டு எரிப்பது வழக்கம்.

இதற்கு மாறாக சமீப காலங்களாக நகர்ப் பகுதிகளில் போகி என்ற பெயரில் டயர், ரப்பர், பிளாஸ்டிக்  மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருள்களைத் தீயிட்டு எரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் எழும் நச்சுப்புகையின் விளைவாக பொதுமக்களுக்குச் சுவாச நோய்கள், கண் எரிச்சல், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுவதுடன் நச்சுக்காற்றாலும், கரும் புகையாலும் சுற்றுச்சூழல் மாசு அடையும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துகளும் நிகழுகின்றன. எனவே இது போன்ற நோய்கள், பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க போகி திருநாளன்று சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுத்தும் பொருள்களை எரிக்க வேண்டாம் எனவும், உயர் நீதிமன்றம் பழைய மரம், வறட்டி தவிர்த்து பிறவற்றை எரிக்க தடை விதித்துள்ள நிலையில், இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவித்துள்ளார். மேலும், தமிழர் திருநாளான பொங்கலுக்கு முந்தைய தினம் ஒரு இனிய தினமாக அமைய அன்று குப்பைகளை முறைப்படி ஒழித்து பொங்கல் திருநாளைச் சிறப்புடனும், புகை மற்றும் காற்று மாசு இன்றியும் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.