வெளியிடப்பட்ட நேரம்: 23:40 (08/01/2018)

கடைசி தொடர்பு:23:40 (08/01/2018)

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கண்ணகிக்குச் சிலை! மதுரை ஆட்சியரிடம் கோரிக்கை

கண்ணகி சிலையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிறுவ வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணகி வம்சம் பாதுகாப்பு இயக்கத்தைச் சார்ந்த பொன்.செந்தில்குமார் உள்ளிட்டோர் இதுதொடர்பாக மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்," மதுரையில் கண்ணகிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும், தமிழக எல்லையில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் செல்ல பாதை அமைக்க வேண்டும். கண்ணகி கோவில் திருவிழா அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். கண்ணகிக்குத் தபால் தலை வெளியிட வேண்டும், வாணியர் செட்டியார் சமுதாயத்தை எம்.பி.சியில் சேர்க்க வேண்டும் , மதுரை உயர்நீதிமன்றத்தில் கண்ணகி சிலை நிறுவ வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது .

மேலும் மத்திய , மாநில அரசுக்குப் பரிந்துரை செய்து இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து கண்ணகி வம்ச பாதுகாப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கூறுகையில் " கண்ணகி தமிழக வரலாற்றில் இடம் பெற்றவர். அவரது சிலையை நீதிமன்றத்தில் நிறுவினால் மிகவும் பொருத்தமாகவும், பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அமையும். எனவே இதனை முக்கியமான விஷயமாகக் கருதி, அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்’ என்றனர்.