நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவன மோசடி: ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்!

குமரி மாவட்டத்தை உலுக்கிய நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக குமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

நிதிநிறுவன மோசடி

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மத்தம்பாலை என்ற இடத்தில் நிர்மலன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த அந்த நிதி நிறுவனத்தில் அப்பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் கேரள மக்களும் ஏராளமானோர் பணம் செலுத்தி வந்தார்கள். பொதுமக்களின் பணம் கோடிக்கணக்கில் திரட்டப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி  நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

பொதுமக்களிடமிருந்து அந்த நிறுவனம் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருக்கக் கூடும் எனத் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள், நாகர்கோவிலில் உள்ள மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். கேரளாவிலும் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், நிதி நிறுவனத்தின் அதிபரான நிர்மலன், மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

இந்த மோசடி தொடர்பாக 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், 11 பேர் கைது செய்யப்பட்டனர். நிதி நிறுவன அதிபரான நிர்மலன் சரண் அடைந்த போதிலும், அவரது மனைவி மற்றும் வழக்கில் தொடர்புடைய 4 பெண்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் போதிய அக்கறை காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டும் பாதிக்கப்பட்ட மக்களால் முன்வைக்கப்பட்டு வந்தது. இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நிர்மலன் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 13,673 முதலீட்டாளர்களுக்கு 510 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

நிர்மலன்

இந்த நிலையில், வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொருளாதாரக் குற்றப் பிரிவினர், நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளைப் பறிமுதல் செய்தனர். குமரி மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் 56 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்தனர். திருவனந்தபுரம் சப்-கோர்ட் நியமித்த அதிகாரிகள் 179 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்தார்கள். இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளின் பட்டியலை அதிகாரிகள் வரும் 20-ம் தேதி வெளியிட உள்ளனர். இதுதவிர, திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் அந்த நிறுவத்துக்குச் சொந்தமான வேறுசில சொத்துகள் கண்டறியப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!