நெசவாளர்களுக்கான இலவசக் கல்வித் திட்டம்! ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

நெசவாளர்கள் வறுமை காரணமாக தங்கள் சிறுவயதில் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டு நெசவுத் தொழிலை செய்து வருகிறார்கள். அப்படிப் பாதியில் நின்றவர்கள் தமிழில் எழுத, படிக்க மட்டும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். நெசவுத் தொழில் நலிவுற்றதால் பலர் வேறு வேலைக்குச் செல்ல நினைக்கிறார்கள். பட்டப்படிப்பு இல்லாததால் சிலருக்குத் திருமணம் செய்வதிலும் சிக்கல் நீடிக்கிறது.

நெசவாளர்களுக்கு கல்வி

இதுபோன்ற சிக்கலில் தவிக்கும் நெசவாளர்களுக்காக இலவசக் கல்வி வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகமும், இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலை பல்கலைக்கழகமும் இணைந்து நெசவாளர்களுக்கு இலவசக் கல்வி வழங்க கடந்த ஆண்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள், ஆறுமாதம் நடத்தப்படும் இந்தக் குறுகிய கால பாடத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதில் பயின்று தேர்வானவர்கள் நேரடியாகப் பட்டப்படிப்பு படிக்க முடியும். நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் காஞ்சிபுரம், ஆரணி போன்ற இடங்களில் கடந்த ஆண்டு நடைபெற்ற வகுப்புகளில் 462 நெசவாளர்கள் பயின்று, தேர்வு எழுதியுள்ளனர். இந்தநிலையில் இரண்டாம் ஆண்டிற்கான சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. ஜனவரி 31ம் தேதிக்குள் 18 வயது நிரம்பிய நெசவாளர்கள் மத்திய அரசின் நெசவாளர் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். நெசவாளர்களின் தொழில் பாதிக்கப்படாதவாறு சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் இந்த வகுப்பு நடைபெறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!