வெளியிடப்பட்ட நேரம்: 01:20 (09/01/2018)

கடைசி தொடர்பு:01:20 (09/01/2018)

கூடங்குளம் அணு உலை குளறுபடிகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல்! கனிமொழி எம்.பி உறுதி

கூடங்குளம் அணு உலையில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் நிதிமுறைகேடுகள் தொடர்பாக மாநிலங்களவையில் பேசுவதாக அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினரிடம் கனிமொழி எம்.பி உறுதியளித்தார். 

கனிமொழி உறுதி

தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழியை அணு சக்திக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன், பச்சைத் தமிழகம் கட்சியின் அருள்தாஸ், கெபிஸ்டன், கதிரவன் ராயன், அபி, விஜயபிரபாகரன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, கூடங்குளம் அணு உலை குளறுபடிகள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர். 

அவர்கள் அளித்த மனுவில், ’’இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் ஆய்வு அறிக்கையில் கூடங்குளம் அணு உலையின் முதல் இரண்டு அலகுகளைக் கட்டுவதில் நடந்த குளறுபடிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001-ம் ஆண்டு 13,171 கோடி ரூபாய் செலவாகும் என்று சொல்லப்பட்டத் திட்டத்திற்கு 2014–ம் ஆண்டு 22,462 கோடி ரூபாய் செலவாகி விட்டது என்று சொன்னார்கள். 

முதலாவது அலகில் எரிபொருள் நிரப்ப 60 நாள்களுக்கு பதிலாக 2015, ஜூன் 24 முதல் 2016 ஜனவரி 31-ம் தேதி வரை உலை மூடப்பட்டதில் 947.99 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.  அணுசக்தி நீராவி சப்ளை எந்திரம், டர்போ ஜெனரேட்டர் பணிகளை ரஷ்ய நிறுவனத்துக்குப் பதிலாக இந்தியப் பணியாளர்களே செய்ததால் 706.87 கோடி ரூபாய் கூடுதல் செலவானது. முதல் அலகில் பயன்படுத்தப்பட்ட டர்பைன் எந்திரத்தில் தயாரிப்புக் கோளாறால் ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்ய ரூ.12.76 கோடி அதிகம் செலவானது. இதை ரஷ்யாவிடமிருந்து பெற இந்திய அணுமின் கழகம் முயற்சி செய்யவேயில்லை. இந்த எந்திரம் நின்றதால், மின் உற்பத்தி முடங்கி, கூடுதலாக ரூ. 53.73 கோடி இழப்பு ஏற்பட்டது. ரஷ்ய நிறுவனம், அணுஉலைக் கட்டுமானத்திற்கான பொருள்கள், வரைபடங்கள், ஆவணங்களை வழங்குவதில் தாமதம் செய்ததால் ரூ.264.79 கோடி இழப்பு ஏற்பட்டது. அதையும் வசூலிக்கவில்லை. 

மனு அளித்த போராட்டக் குழுவினர்

இதில் காங்கிரஸ் கட்சியினர், மூத்த அணுசக்தி அதிகாரிகள் பயனடைந்தார்களா என்று விசாரிக்க வேண்டும். கூடங்குளம் திட்டத்திற்கு ஏறத்தாழ ரூ. 50 கோடிக்கு டீசல் வாங்கியது பற்றியும் அணுஉலைகளில் விபத்து இழப்பீடு பற்றியும் சி.ஏ.ஜி அறிக்கை பேசவில்லை. இந்த ஆய்வும், அறிக்கையும் பணப் பிரச்னைகள் பற்றி மட்டுமே பேசுகின்றன. தொழிற்நுட்ப பிரச்னைகள் பற்றி ஆய்வு செய்தால் இன்னும் பல பயங்கரமான பூதங்கள் வெளிக் கிளம்பும். 

கூடங்குளம் ஊழல்கள், ஊதாரித்தனங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் அன்றே சொன்னதை சி.ஏ.ஜி. இன்று சொல்கிறது. கூடங்குளம் உலைகள் தரமற்றவை, ஆபத்தானவை என்று நாங்கள் சொல்வதும் விரைவில் உறுதிப்படுத்தப்படும். அணுசக்தி அமைச்சரான பிரதமர் மோடி எதுவும் பேச மறுக்கிறார். தமிழக முதல்வர் கேள்விகள் கேட்க அஞ்சுகிறார். கூடங்குளம் உலைகள் பற்றி முழு ஆய்வு நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். விரிவாக்கத் திட்டம் உடனே நிறுத்தப்பட வேண்டும். மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும்’’ என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து நாடாளுமன்றத்தில் நிச்சயமாகப் பேசுவதாக கனிமொழி எம்.பி உறுதியளித்தார்.