வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/01/2018)

கடைசி தொடர்பு:06:00 (09/01/2018)

"ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்" - கி.வீரமணி விமர்சனம்

ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம் என்று கோவையில் கி.வீரமணி கூறியுள்ளார்.

வீரமணி

கோவை மண்டல திராவிடக் கழக கலந்துரையாடல் கூட்டம். கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று நடந்தது. இதில் திராவிடக் கழக தலைவர் கி.விரமணி கலந்து கொண்டு, திராவிட கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் உரையாற்றினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வீரமணி, "போக்குவரத்துத் தொழிலாளிகளின் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு செவி சாய்க்க மறுக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்த தமிழக அரசு, தற்போதுவரை அவற்றை முழுமையாக நிறைவேற்றவிவ்லை. தமிழக அரசின் போக்கில் மாற்றம் வேண்டும். தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், தற்போது பொதுமக்கள் கடும் அவஸ்தயைச் சந்தித்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

வீரமணி

ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம் என்று நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். ஆன்மிகத்துக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை. இங்கு ஆன்மிகத்துக்கே இன்னும் சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆன்மிக அரசியல் என்பது சொல்பவர்களுக்கும் புரியாது, கேட்பவர்களுக்கும் புரியாது. ஆன்மிகம் என்பதே இல்லாத ஒன்று. தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசியல்வாதிகள் நல்ல நடிகர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், நடிகர்கள் யாரும் நல்ல அரசியல்வாதியாக இருப்பார்களா என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது"  என்றார்.