வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (09/01/2018)

கடைசி தொடர்பு:08:18 (09/01/2018)

`ஓட்டுக்குப் பணம் தரும் அரசே, மாணவர் நோட்டுக்கு பணம் இல்லையா!' - திருச்சியை மிரளவைத்த மாணவப் போராட்டம்

கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி திருச்சி கல்லூரி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

கல்லூரி மாணவர்கள்திருச்சி காஜாமலைப் பகுதியில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் படிக்கும் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி ஊக்கத் தொகை வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டி வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரியின் நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாணவர்கள், ஏழை மாணவர்களின் வயிற்றில் அடிக்காதே, படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உடனே வழங்கு என்றும், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் தமிழக அரசே, படிக்கும் மாணவர்கள் நோட்டுக்கு பணம் இல்லையா என  அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதைத் தொடர்ந்து மாணவர்கள், அருகில் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றபோது, அங்கு விரைந்து வந்த போலீஸார், அவர்களை மறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வரும் 30-ம் தேதிக்குள் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் கலைந்துசென்றனர்.

கல்லூரிநம்மிடம் பேசிய மாணவர் பிரபு, "திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து திருச்சி பெரியார் ஈ.வெ.ரா  கல்லூரியில் படிக்கிறோம். நாங்கள், திருச்சியில் பல விடுதிகளில் தங்கியுள்ளோம். விடுதியில் தங்கியிருக்கும் எங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கல்வி உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் விடுதியில் தங்கிப் படிப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. அந்தப்பணம் வந்தால்தான், விடுதிக் கட்டணங்கள் செலுத்தமுடியும். எங்கள் சிரமத்தைப் போக்க  உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும்" என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க