வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (09/01/2018)

கடைசி தொடர்பு:08:15 (09/01/2018)

அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த எதிரொலி... வெறிச்சோடிக் காணப்பட்ட திருப்பூர் ஆட்சியர் அலுவலகம்!

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் மாவட்டத்தின் ஆட்சியரே நேரடியாக பொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெற்று அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வார். இதனால், மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறும் நாள்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும்.

ஆனால், தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்திலும் பேருந்து போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டதால், இன்றைய தினம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் பேருந்து வசதியின்றி, குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளும் திங்கட்கிழமையன்றே வந்ததால், கடந்த இரண்டு திங்கட்கிழமைகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.