பள்ளி குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான வேன் ஓட்டுநருக்கு 7 ஆண்டு சிறை..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே நம்புதாளை கிராமத்தில் பள்ளி வேன் லாரியில் மோதி 3 குழந்தைகள் இறந்த வழக்கில் வாகன ஓட்டுநருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

அக்பர் அலி


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே நம்புதாளையில் அஞ்சல் அலுவலகத் தெருவில் வசித்துவந்தவர் பூபதி மகன் அக்பர் அலி (23). இவர் குடி போதையில் பள்ளிக்குழந்தைகள் சிலரை வேனில் ஏற்றிக்கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் தொண்டி அருகே நம்புதாளை பகுதி ஐஸ்பிளான்ட் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரில் வந்த லாரி மீது வேன் மோதியது. இதில் பள்ளி வேனில் இருந்த நம்புதாளையைச் சேர்ந்த சுப்பையா மகன் சரவணக்குமார் (8), கோவிந்த்  என்பவரது மகள் பிரியா (11) அப்பாஸ் மகள் ஆர்த்தி (10) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஜீவிதா (5), சரவணப்பிரியா (14) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். 

2014-ம் ஆண்டு நடந்த  இந்தச் சம்பவம் தொடர்பாக நம்புதாளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான உத்திராபதி மகன் ஏ.வி.சத்தியசீலன் கொடுத்த புகாரின் பேரில் தொண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து வாகன ஓட்டுநர் அக்பர் அலியை கைதுசெய்திருந்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி த.லிங்கேசுவரன் குடிபோதையில் வாகனத்தை ஓட்டினால் மரணம் ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் அதிவேகமாகவும், கவனக் குறைவாகவும் பள்ளி வேனை ஓட்டியது மற்றும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பெறாதது உள்ளிட்ட காரணங்களுக்காக அக்பர் அலிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.4500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!