இந்துக் கடவுள்களை இழிவு செய்ததாக கூறி திருச்சி வேலுச்சாமி மீது வழக்குப் பதிவு!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நேற்றிரவு திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், திருப்பூர் காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், த.மு.மு.க பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் உறுப்பினர்கள் இந்துக்கள் மனது புண்படும் விதமாக பேசியும், இந்து அமைப்பின் கொடியை காலால் மிதித்தும், இந்து அமைப்பைச் சேர்ந்த பாலாஜி என்பவர் மீது தாக்குதலும் நடத்தியிருக்கிறார்கள். மேலும் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, இந்துக் கடவுள்களையும், பிரதமர் மோடியையும் தரக்குறைவாகப் பேசினார். எனவே அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதனைத்தொடர்ந்து 4 பிரிவுகளின் கீழ், திருச்சி வேலுச்சாமி மற்றும் த.மு.மு.க உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!