`கழிவறைக்கு செல்லக் கூட காசு இல்லை!' - 50 ஆண்டுக்கும் மேலாக தொடரும் சோகக் கதை

``வானமே கூரை, பூமியே பாய், திறந்தவெளியே சமையலறை, பேரூராட்சி கட்டண கழிப்பட கட்டிடமே எங்களுக்கு குளியலறை, கழிவறை. மரத்தடி நிழலே எங்கள் தொழிற்கூடம், பசியும், மழையுமே எங்கள் பகைவர்கள்" என்று வாழ்ந்து வருகிறார்கள் அந்தியூர் தப்பை குறவர்கள். இவர்களுக்கு தலைமுறை தலைமுறையாக சொந்தமாக ஒரு சதுர அடி நிலம் கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான் கூடுதல் வேதனை.

இவர்களுக்காக குரல் கொடுத்து வரும் அந்தியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுசாமி, ''சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்தியூர் பேருந்து நிலையம் அருகில் பத்திரகாளியம்மன் கோயில் மெயின் ரோட்டின் ஓரமாக குழந்தை, குட்டிகளோடு 17 குடும்பத்தைச்  சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தப்பை குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் குலத்தொழில் மூங்கில் கூடை, முறம் பின்னுதல்லும் ஆகும். அதில் கிடைக்கும் சொர்ப்பமான வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு சொந்தமாக ஒரு சதுர அடி நிலம் கூட கிடையாது. பகலில் ரோட்டோரமாக கூடை, முறம் பின்னுவார்கள். இரவானால் சாத்தி இருக்கும் கடைகளின் ஓரமாக படுத்துக் கொள்ளுவார்கள். பெண்கள் காலைக்கடன் போவதற்கும், குளிப்பதற்கும் பேரூராட்சி கட்டண கழிப்பிடத்திற்கு செல்ல வேண்டும். சில நாள்கள் காலை கடன் கழிப்பதற்கு 5 ரூபாய் இல்லாமல் பெண்கள் படும் துயரம் சொல்லி மாலாது. இவர்களுக்கு படிப்பறிவு இல்லை. இவர்களின் குழந்தைகள் மதிய உணவிற்காக பள்ளிக்கூடம் செல்கிறார்கள். முகவரி இல்லாத இவர்களுக்கு போலி முகவரியில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை கொடுத்திருக்கிறது. இவர்களுக்கு நிரந்தர குடியிருப்புக்காக பல வருடமாக போராடி வருகிறேன். ஈரோடு கலெக்டரை பல முறை சந்தித்து மனு கொடுத்தும் எந்த பிரையோஜனமும் இல்லை'' என்றார்.

இதுப்பற்றி தப்பை குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பெருமாள், ''எங்க பூர்வீகம் கொல்லிமலை. பஞ்சத்திற்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்துட்டோம். எங்களுக்கு வீடு, வாசல் இல்லை. இந்த கலெக்டர் சாமி எங்களுக்கு இலவச வீடு கொடுத்தால் நல்லா இருக்கும்'' என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!