வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (09/01/2018)

கடைசி தொடர்பு:11:03 (09/01/2018)

திருப்பூர் அட்டை குடோனில் தீ விபத்து... பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

திருப்பூரில் இயங்கி வரும் அட்டை குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின. 

திருப்பூர், அண்ணா நகர் பகுதியில் ஸ்டிக்கர் தயார் செய்யும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளரான அமித் என்பவர் அதே பகுதியில் குடோன் ஒன்றை அமைத்து, தன் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் மற்றும் கோன் அட்டைகளை அங்கு குவித்து வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிய துவங்கின. தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர், குடோனில் பற்றியெரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அணைக்க முடியாத அளவுக்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயால் குடோன் முழுவதும் கருகிப்போனது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.