செய்நன்றி மறவாத ஜப்பானியர்... வியந்த திருச்சி மருத்துவர்கள்!

ப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், விபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிய தமிழக மருத்துவர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தார். 

மருத்துவர்களுக்கு நன்றி கூறும் ஜப்பானியர்

ஜப்பானில் ஆசிரியராக பணியாற்றி வந்த இஷோவா, கடந்த ஆண்டு தமிழகத்துக்குச் சுற்றுலா வந்திருந்தார். திருச்சி பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த அவர் ஸ்ரீரங்கத்தில் பேருந்தில் ஏறினார். அப்போது, தவறி கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நினைவுத் தப்பியது. இதைப் பார்த்த  செய்தியாளர்கள் இருவர் இஷோவாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

திருச்சி அரசு மருத்துவமனையில் 20 நாள்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. செய்தியாளர்களும் அவரின் நண்பர்களும் இஷோவாவை அவ்வப்போது வந்து பார்த்து சென்றனர். மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையால் இஷோவா உயிர் பிழைத்துக் கொண்டார். அவருக்கு நினைவும் திரும்பியது. எனினும், அவரால் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூற இயலவில்லை.

மருத்துமனை நிர்வாகத்தினர் ஜப்பான் துதரகத்தை அணுகி, இஷோவாவை தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். தாய்நாட்டில் சிகிச்சை பெற்ற அவர் முற்றிலும் குணமடைந்தார். இஷோவாவின் குடும்பத்தார் திருச்சியில் நடந்த சம்பவங்களை அவருக்கு எடுத்துக் கூறினார். இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு வந்த அவர், திருச்சியில் தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களையும் அரசு மருத்துவமனை டீன் அனிதாவையும் சந்தித்து நன்றி கூறினார். தன்னை காப்பற்ற உதவிய செய்தியாளர்களையும் நேரில் சந்தித்து இஷோவா நன்றி தெரிவித்தார்.

தன் உயிரைக் காப்பற்றியவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காக ஜப்பானில் இருந்து வருகை தந்தை இஷோவாவின் பண்பு சுற்றியிருந்தவர்களை நெகிழ வைத்தது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!