வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (09/01/2018)

கடைசி தொடர்பு:11:13 (09/01/2018)

தற்காலிக ஓட்டுநர் ஓட்டிய பேருந்து, கல்லூரி பஸ்மீது மோதி விபத்து!

 திருச்சியிலிருந்து மதுரை வந்த அரசுப் பேருந்து, தனியார் கல்லூரிப் பேருந்துமீது மோதியதால் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தற்காலிக பேருந்து ஓட்டுநர்களைக்கொண்டு பேருந்துகள் இயக்கபட்டுவருகின்றன. இந்நிலையில், திருச்சியிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தை தற்காலிக ஓட்டுநர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டிவந்தார். அப்போது, மதுரை உத்தங்குடி அருகே தனியார் கல்லூரிப் பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது பின்புறமாக மோதியது அரசுப் பேருந்து. இதில் அரசுப் பேருந்தின் முன்புறக் கண்ணாடி உடைந்தது. இதில் பயணித்த கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசுப் பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் அறிந்து, கோ.புதூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து, தற்காலிக ஓட்டுநர் செந்திலிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடரும் நிலையில், மதுரையில் தலைமை போக்குவரத்துப் பணிமனை முன்பு குடும்பத்தோடு இன்று போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.  அதனால், இன்று மதுரையில் பதற்றமான சூழ்நிலை உருவாகும் என காவல்துறை டென்ஷன் அடைந்துள்ளது.