வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (09/01/2018)

கடைசி தொடர்பு:09:58 (09/01/2018)

குஜராத் வெற்றிமூலம் இந்தியா முழுவதும் பி.ஜே.பி ஆட்சி அமைய வாய்ப்பு: மோடி சகோதரர் பேட்டி

குஜராத் தேர்தல் வெற்றியின்மூலம் இந்தியா முழுமைக்கும் பி.ஜே.பி-யின்  ஆட்சி அமையும் வாய்ப்பு உருவாகியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடியின் மூத்த சகோதரர் பிரகலாத் மோடி ராமேஸ்வரத்தில் தெரிவித்தார்.


 

பிரதமர் நரேந்திர மோடியின் மூத்த சகோதரர் பிரகலாத் மோடி, தனது நண்பர்களுடன் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்திருந்தார். கோயிலில் ராமநாதசுவாமி மற்றும் பருவதவர்த்தினி அம்மன் சந்நிதிகளில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  ''ஜி.எஸ்.டி மற்றும் ரூபாய் நோட்டு முடக்கம் ஆகிய பிரச்னைகளால் குஜராத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு எதிர்ப்பு ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால், அந்த பிரச்னைகளைத் தாண்டி குஜராத்தில் பி.ஜே.பி வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின்மூலம் நாடு முழுவதும் பி.ஜே.பி ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. உத்தரப்பிரதேச அரசு மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகியன, இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவுடன் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுவை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் பசுவதைத் தடைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'' என்றார். முன்னதாக ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பிரகலாத் மோடியை பி.ஜே.பி மாவட்டத் தலைவர் முரளிதரன், நகர் தலைவர் என்.சி.ஶ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் சுந்தரம் வாத்தியார், பாஸ்கரன், மலைச்சாமி, நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.