வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (09/01/2018)

கடைசி தொடர்பு:08:39 (09/01/2018)

நெல்லையில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு: பதற்றம் அடைந்த பயணிகள்!

போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் நடந்துவரும் நிலையில், நெல்லையில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு நடைபெற்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

கல்வீச்சு - பேருந்து

ஊதிய உயர்வு, ஓய்வுதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக் கழகத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதனால், தமிழகம் முழுவதும் போக்குவரத்து சேவை முடங்கி இருக்கிறது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு சார்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டம் தொடர்கிறது. 

இந்த நிலையில், தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைக்கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தற்காலிக ஓட்டுநர்களால் சிறிய விபத்துகள் ஏற்பட்டு சிக்கல்கள் உருவாகிவரும்நிலையில், தற்காலிக நடத்துநர்களுக்கு பேருந்துக்கான டிக்கெட்டின் விலை தெரியாத குழப்படிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். 

பேருந்துப் பற்றாக்குறை ஒருபக்கம் இருக்கும் நிலையில், இயங்கக்கூடிய பேருந்துகளில் ஏறினால், உரிய இடத்தை ஆபத்தில்லாமல் அடைய முடியுமா என்கிற கேள்விக் குறியுடன் பொதுமக்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்திலிருந்து நெல்லை சந்திப்பு நோக்கி இரவில் வந்துகொண்டிருந்த பேருந்துமீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்தப் பேருந்து, அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அருகில் வந்தபோது, மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி முற்றிலுமாக உடைந்து நொறுங்கியது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் பாத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுநர் கார்த்திக் மற்றும் நிரந்தரப் பணியாளரான நடத்துநர் சுந்தர் ஆகிய இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.