வெளியிடப்பட்ட நேரம்: 10:02 (09/01/2018)

கடைசி தொடர்பு:10:59 (09/01/2018)

`ரெகுலர் பஸ்ஸே இல்லை... இதுல ஸ்பெஷல் பஸ் வேறயா?' - முன்பதிவு மையத் திறப்பை ரத்துசெய்த அமைச்சர்

ஆண்டுதோறும் பொங்கல் பண்டியகையையொட்டி, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இந்த ஆண்டும் சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவுசெய்யப்பட்டு, அதற்கான முன்பதிவு மையங்கள் இன்று திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இந்த நிகழ்ச்சி இன்று திடீரென ரத்துசெய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை என்பதால், வெளியூர்வாசிகள் சொந்த ஊர் செல்வது என்பது அதிக அளவில் இருக்கும். அதன்படி, ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் 20-க்கும் அதிகமான முன்பதிவு மையங்கள் திறக்கப்படும். அதேபோல, இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, இன்று முதல் சிறப்பு கவுன்ட்டர்களில் முன்பதிவு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

300 கி.மீ தூரத்துக்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவுசெய்ய, கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்களும், தாம்பரத்தில் 2, பூந்தமல்லியில் ஒன்று என மொத்தம் 29 முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முன்பதிவு மையத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்து, முன்பதிவைத் துவக்கிவைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விஜய பாஸ்கர்


போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, வழக்கமாகச் செல்லும் பேருந்துகளே இயக்கப்படாத நிலையில், சிறப்புப் பேருந்துகள் இயக்குவது எப்படி? என்ற கேள்வி எழுந்தது.  அதனால், சென்னை கோயம்பேட்டில், பொங்கல் சிறப்புப் பேருந்துகள் முன்பதிவு மையம் தொடக்க விழா நிகழ்ச்சி, இன்று திடீரென ரத்துசெய்யப்பட்டது.

திட்டமிட்டபடி இன்று முன்பதிவு துவங்கப்படாததால், பயணிகள் அதிருப்தியடைந்தனர். பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும் திட்டத்தில் உள்ள பயணிகள்,  போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக எப்படிச் செல்வது என்று தெரியாமல் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க