வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (09/01/2018)

கடைசி தொடர்பு:12:55 (09/01/2018)

`கோவை பெயரைக்கேட்டாலே கொள்ளையர்கள் அதிரணும்'- களத்தில் இறங்கியது போலீஸ்

கோவை மாநகரின் எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பணியில் காவல்துறை இறங்கியுள்ளது.

coimbatore

அமைதியான மக்கள், அழகான ஊர் என்று கோவைக்கு எத்தனையோ அடையாளங்கள் உள்ளன. அதே அமைதியான கோவையின் பாதுகாப்புக்கும் சவால்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, மாவோயிஸ்ட்களின் ஊடுருவல், வட இந்தியக் கொள்ளையர்கள் என்று ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில், அடுத்தடுத்த ஏ.டி.எம் கொள்ளையால் கோவையை அதிரவைத்த வட இந்தியக் கொள்ளையர்களை, ஸ்கெட்ச் போட்டு பிடித்தது கோவை காவல்துறை.

சேஸிங், டெக்னாலிஜியைப் பயன்படுத்துதல் என்று அசத்திய கோவை போலீஸின் இந்த ஆபரேஷனுக்கு பாராட்டுகள் குவிந்தன. இதையடுத்து, கோவையின் எல்லைப் பகுதிகளைப் பலப்படுத்துவதற்கான பணிகளில் காவல்துறை இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``கோவையைப் பொறுத்தவரை, திருச்சி சாலை, அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை உள்ளிட்ட ஏழு வழிகள் உள்ளன. அவற்றில் ஏற்கெனவே கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதும், அனைத்து எல்லைகளிலும் தொழில்நுட்ப வசதிகளுடன் பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையின் பெயரைக் கேட்டாலே, கொள்ளையர்களும், சமூக விரோதிகளும் பயப்படும் அளவுக்கான நடவடிக்கைகளில் இறங்கப்போகிறோம்" என்றார்.