வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (09/01/2018)

கடைசி தொடர்பு:12:07 (10/01/2018)

கல்லூரிக்குச் சென்றபோது மகள் கண்ணெதிரே கொல்லப்பட்ட தந்தை! - சென்னையில் பயங்கரம் 

 கொலை நடந்த இடம்

கல்லூரிக்கு மகளை அழைத்துச்சென்ற தந்தை, படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் கந்தன். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவரது மகள் கீர்த்தனா. இவர், சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். இன்று காலை 7 மணியளவில் கீர்த்தனாவை கல்லூரியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் கந்தன் எல்லையம்மன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஆட்டோ மற்றும் பைக்கில் வந்த மர்மக் கும்பல், கந்தனை வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டிச்சாய்த்தது. அவர்களிடமிருந்து தந்தையைக் காப்பாற்ற கீர்த்தனா முயற்சி செய்தார். இதனால், கீர்த்தனாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

கந்தன் ஓட்டி வந்த பைக்

தன்னுடைய கண் முன்னால் தந்தை இறப்பதைத் தடுக்க முடியாமல் கதறிஅழுதார் கீர்த்தனா. கந்தனை வெட்டிக்கொன்ற கும்பல், சர்வசாதாரணமாக ஆட்டோ, பைக்கில் புறப்பட்டுச்சென்றது. தகவலறிந்த குமரன் நகர் போலீஸார், விரைந்துவந்து கீர்த்தனாவை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். கந்தன் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீஸார், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்துவருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.