போலீஸால் இரவு 3.30 மணிக்கு கதறிய குழந்தைகள்! தொழிற்சங்கத் தலைவர், செயலாளருக்கு நடந்த சோகம் | Police threatens Transport workers

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (09/01/2018)

கடைசி தொடர்பு:12:25 (09/01/2018)

போலீஸால் இரவு 3.30 மணிக்கு கதறிய குழந்தைகள்! தொழிற்சங்கத் தலைவர், செயலாளருக்கு நடந்த சோகம்

2003-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எஸ்மா சட்டத்தின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கைதுசெய்ததைப்போல, நேற்றிரவு சேலம் சூரமங்கலம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்துத்துறை தொழிற்சங்க நிர்வாகிகள் 4 பேரை நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம், போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைதுசெய்யப்பட்ட கோவிந்தராஜ், ''நான்  சேலம் மெய்யனூர் பணிமனைக்கு உட்பட்ட பேருந்தில் டிரைவராகப் பணியாற்றுகிறேன். போக்குவரத்துத்துறை தொழிற்சங்கப் பிரிவில் சி.ஐ.டி.யூ மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்துவருகிறேன். என்னுடைய சொந்த ஊர் ஓமலூர் டோல்கேட் அருகே உள்ள கோட்டகவுண்டன்பட்டி. அங்கு என் மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளோடு கூட்டுக் குடும்பமாக வசித்துவருகிறேன். நேற்று, இரவு 2.30 மணிக்கு 5 காவலர்கள், ஒரு எஸ்.ஐ., என 6 பேர் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி, தூங்கிக்கொண்டிருக்கும்போது துணிகூட மாற்றவிடாமல் காவல்துறை உதவி ஆணையாளர் செல்வராஜ் கூப்பிடுவதாக  இழுத்துட்டுவந்துட்டாங்க.

சூரமங்கலம் காவல் நிலையத்தில் 6 மணி நேரம் வைத்திருந்து, ''போராட்டங்களில் கலந்துகொள்ள மாட்டேன், யாரையும் போராடத் தூண்டிவிட மாட்டேன். பேருந்துகளுக்கு சேதம் விளைவிக்க மாட்டேன்'' என்று ஒரு வெள்ளைத்தாளில் எழுதி கையெழுத்து போட்ட பிறகு, காலை 8.30 மணிக்கு வெளியே விட்டார்கள்'' என்றார்.

கைதுசெய்யப்பட்ட ராஜேந்திரன், ''நான், சேலம் அஸ்தம்பட்டி பணிமனைக்கு உட்பட்ட பேருந்தில் டிரைவராகப் பணியாற்றுகிறேன். போக்குவரத்துத்துறையில் பாட்டாளி தொழிற்சங்கத்தின் சேலம் மண்டலத் தலைவராகவும் இருக்கிறேன். நான், காமலாபுரத்தில் குடியிருக்கிறேன். மனைவி, குழந்தைகளோடு தூங்கிக்கொண்டிருக்கும்போது, இரவு 3:30 மணிக்கு 5-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிரவாதிகளைப் பிடித்துக்கொண்டு போவதுபோல அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து மனைவி, குழந்தைகள் கதறி அழ,  இழுத்துட்டு வந்துவிட்டார்கள்'' என்றார் வேதனையுடன்.