சிறுமிக்கு பாலியல் தொல்லை! விசைத்தறி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

திருப்பூர் அருகே, பள்ளிச் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விசைத்தறித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், விசைத்தறித் தொழிலாளி இளம்சூரியன். இவர், கடந்த சில வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்ததாகத் தெரிகிறது. இவருடைய வீட்டின் அருகில், தன் பெற்றோருடன் வசித்துவந்த சிறுமி, அந்தப் பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். பள்ளி விடுமுறை நாளில் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டம்விட்ட இளம்சூரியன், அந்தச் சிறுமியிடம் பேனா எடுத்துவருமாறு கூற, சிறுமி பேனாவை எடுத்து இளம்சூரியனிடம் கொடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது, சிறுமியை வீட்டுக்குள் வைத்து, வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறார். அப்போது, பயத்தில் சிறுமி கூச்சலிட, அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிச்சென்று சிறுமியை மீட்டிருக்கிறார்கள். சம்பவம்குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், இளம்சூரியனைக் கைதுசெய்து வழக்குப்பதிவு செய்தனர். 

குழந்தைகள் பாலியல் குற்றப் பாதுகாப்பு சட்டப் பிரிவின் கீழ், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பதிவுசெய்யப்பட்ட இவ்வழக்கின் விசாரணை, திருப்பூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றவாளி இளம்சூரியனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!