வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (09/01/2018)

கடைசி தொடர்பு:13:15 (09/01/2018)

மதுரையில் வீதி உலா வந்த அஷ்டமி சப்பரம்!

மதுரையில், கோயில்களுக்கும் விழாக்களுக்கும் பஞ்சம் இல்லை. அனைத்து சுபதினங்களிலும் மாசி வீதிகள் களைகட்டும். மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன்  படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சியாகக் கருதப்படும் மதுரையில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்  சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான 'அஷ்டமி சப்பரம்' என்னும் தேர் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம்.

இந்நிகழ்ச்சி, இன்று அதிகாலை 5.30 மணிக்கு  கோயிலிலிருந்து சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு மாசி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள்  கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வந்தனர். அம்மன் சப்பரத்தை பெண்கள்  இழுப்பது தனிச்சிறப்பாகும். நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த சப்பரத்தை  ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும், கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் சென்றனர். திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், அள்ள அள்ள அண்ணம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்ற நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்காக எனத் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க