`பணமிருந்தால் ஆட்டோ, கால்டாக்ஸி... இல்லன்னா நடராஜா சர்வீஸ்' - சென்னை மக்களின் பரிதாபக் கதை #BusStrikeChaos

பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள்

பேருந்து ஸ்டிரைக் காரணமாக சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பணமிருந்தால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால்டாக்ஸி மூலம் மக்கள் பயணிக்கின்றனர். பணமில்லை என்றால் நடந்தே செல்கின்றனர். 

அரசு போக்குவரத்துக் கழக டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆகியோர் ஊதிய உயர்வு உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டம் காரணமாக கடந்த 6 நாள்களாக தமிழகம் முழுவதும் முழுமையாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய பேருந்து வசதியில்லாமல் சிரமப்பட்டுவருகின்றனர். குறிப்பாக சென்னையில் மக்கள், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். பேருந்து சேவையை தங்களுக்குச் சாதமாக ஆட்டோ, கால்டாக்ஸி டிரைவர்கள் பயன்படுத்திவருகின்றனர். ஆட்டோ டிரைவர்கள், வழக்கத்தை விட இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். வேறுவழியின்றி மக்களும் கூடுதல் கட்டணத்தில் பயணிக்கின்றனர். 
இந்தச் சூழ்நிலையில் பேருந்து ஸ்டிரைக் காரணமாக தினந்தோறும் காலை முதல் இரவு வரை சென்னை பயணிகள் அனுபவங்களை விவரிக்கும் பரிதாபக்கதைதான் இந்தக்கட்டுரை.

சென்னையில் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலை, எல்.ஐ.சி. பேருந்து நிறுத்தத்தில் நடந்த ஒரு சம்பவம் இது. அலுவலகம் முடிந்து வீடுகளுக்குத் திரும்ப நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது, ஐயப்பன்தாங்கலிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கிவந்த அரசுப் பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. பயணிகளில் சிலர் அந்தப் பேருந்தை விரட்டினர். நிறுத்தத்தை விட்டு சிறிது தூரத்தில் அரசுப் பேருந்தை டிரைவர் நிறுத்தினார். ஓடிச்சென்ற பயணிகள், முண்டியடித்து அதில் ஏற முயன்றனர். பேருந்தின் படியில் தேனீக்கள் போல பெண்கள்கூட தொங்கிக் கொண்டிருந்தனர். அது, ஆபத்தான பயணம் என்று தெரிந்தாலும் வேறுவழியின்றி அதில் துணிச்சலாக மக்கள் பயணித்தனர். இரண்டு பேருந்தில் ஏறக்கூடிய கூட்டத்தை ஒரு பேருந்தில் ஏற்றிக்கொண்டு ஆமை வேகத்தில் சென்ட்ரல் நோக்கிச் சென்றது. 

இதையடுத்து, அண்ணாசாலையில் வந்த ஷேர் ஆட்டோவை வழிமறித்த சில பெண்கள் அதில் ஏறினர். முன்பெல்லாம், ஷேர் ஆட்டோ டிரைவர், கூவி, கூவி பயணிகளை அழைப்பார். பேருந்து ஸ்டிரைக்கால் அந்த நிலை மாறியுள்ளது. சில ஷேர் ஆட்டோ டிரைவர்கள், கேட்கும் கட்டணத்தை கொடுத்து அந்தப்பெண்கள் ஏறிக்கொண்டனர். அடுத்தடுத்து வந்த ஆட்டோக்களும், ஷேர் ஆட்டோக்களும் நிரம்பியபடி சென்றன. இன்னும் சிலர், கால்டாக்ஸியில் பயணித்தனர். ஆனால், ஒரு மணி நேரமாக காத்திருந்த பயணிகள் வெறுப்படைந்து சென்ட்ரலுக்கு நடந்தே சென்றனர். அவர்கள், தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்தனர். 
 

பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள்

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் திருவிழா போல கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதின. பாரிமுனை, பிராட்வே என வடசென்னையிலிருந்து சென்னை அண்ணாசாலை வழியாக இயக்கப்பட்ட சில பேருந்துகளில் ஏறக்கூட முடியாத கூட்டம். அதில், தட்டுத்தடுமாறி, சிரமங்களுக்கிடையே பயணிகள் ஏற முயன்றனர். ஆனால், பலரது முயற்சி தோல்வியடைந்தது. இதனால் பேருந்தில் ஏறுவதற்காக பலர், பாரிமுனை வரை நடந்தே சென்றனர். இன்னும் சிலர், அவ்வழியாக வந்த ஆட்டோக்களில் ஏறி கட்டணத்தை ஷேர் செய்துகொண்டனர். வழக்கமாகவே இந்த வழித்தட பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். பேருந்து ஸ்டிரைக் காரணமாக பயணிக்க வழித்தெரியாமல் மக்கள் சிரமப்பட்டனர். பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால் பொது போக்குவரத்தை நம்பாமல் பலர் தங்களது சொந்த வாகனங்களில் பயணிக்கின்றனர். இதனால், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பேருந்துகளை இயக்க மாற்று ஏற்பாடாக, தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், அரசுப் பேருந்துகளை இயக்கக்கூடிய அனுபவம் இல்லாத தற்காலிக டிரைவர்கள் திணறினர். இதன்விளைவு, அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலை தொடரக்கூடாது என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

மக்கள் குறித்த அக்கறை இந்த அரசுக்கு இல்லை என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. பேருந்து ஸ்டிரைக் குறித்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்த பணத்தை உடனடியாக அரசு திரும்பக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்குச் சாதகமான இந்த தீர்ப்பால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் ஸ்டிரைக் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர். 
 
 ஆறுமுகம்அரசுப் போக்குவரத்துக் கழக வரலாற்றில் எத்தனையோ போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால், ஊதிய உயர்வு கேட்டு கடந்த 1977, 2017 ஆகிய ஆண்டுகளில் போராட்டங்கள் நடந்துள்ளன. தற்போது 2018-ம் ஆண்டு 6 நாள்களாக போராட்டம் நடந்துவருகிறது. போக்குவரத்துக் கழகப் போராட்டங்கள்குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் மூத்த நிர்வாகி ஆறுமுகம் கூறுகையில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், 1972 முன்புவரை அரசுப் போக்குவரத்துத் துறையாக செயல்பட்டது. அப்போது, போக்குவரத்துத் துறையில் பணியாற்றியவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கப்பட்டது. 1977-ம் ஆண்டு நீண்ட கால தொடர் ஊதிய திட்டம் என்ற பெயரில் அரசுப் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இதைக் கண்டித்து 1977-ம் ஆண்டு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 20 நாள்கள் வரை போராட்டம் தொடர்ந்தது. அடுத்து, 2017-ம் ஆண்டு மே மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் ஊதிய உயர்வு கேட்டு ஸ்டிரைக்கில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, அரசு நடத்திய பேச்சுவார்த்தையால் போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது, கடந்த 4-ம் தேதி முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டம் தொடர்வதற்கு அரசும், அதிகாரிகளுமே காரணம். ஏனெனில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வழிவகை செய்யலாம். ஆனால், அதைச் செய்யாமல் தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் அரசும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். 
 கடந்த 2001-ம் ஆண்டு போனஸ் கேட்டு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப்போராட்டம் 18 நாள்கள் தொடர்ந்தன. அதில், ஒரே நேரத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைதுசெய்யப்பட்டனர். இதனால், தமிழக சிறைகள் நிரம்பின. இதற்குமுன் 1993-ம் ஆண்டு போனஸ் கேட்டு 6 நாள்கள் போராட்டம் நடந்தது. தற்போதுகூட, தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணப்பலன்களை வழங்குவதாகவும் தொழிற்சங்கங்கள் கேட்ட ஊதிய உயர்வை அறிவித்தாலும் ஸ்டிரைக் வாபஸ் பெற வாய்ப்புள்ளது. ஸ்டிரைக்கால் அரசுக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைவரை போராட்டம் தொடர்ந்தால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்குப் பாதகமில்லாத நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உத்தவிட்டப்பிறகும் தஞ்சையில் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது, திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையோடு நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே, சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!