ஜெயா டிவி-க்கு அனுராதாவை முன்னிறுத்தும் தினகரன்! : சிவக்குமாரிடம் கொதித்த விவேக் ஜெயராமன் #VikatanExclusive

அனுராதா, தினகரன்

ஜெயா டிவி அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக இருக்கிறது டி.டி.வி.தினகரன் குடும்பம். `நிதி நிர்வாகத்தை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கிறார் தினகரன். ஜெயா டிவி அதிகாரத்துக்கு மனைவி அனுராதாவை முன்னிறுத்த விரும்புகிறார். இதன் விளைவாகவே கடந்த சில நாள்களாகக் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார் விவேக் ஜெயராமன்' என்கின்றனர் மன்னார்குடி குடும்ப உறவுகள். 

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு, பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேச விரும்பினார் தினகரன். சிறை சந்திப்பு முடிந்து வெளியே வந்த தினகரன், `அம்மா அவர்களின் நினைவாக ஜனவரி இறுதிவரையில் மௌன விரதம் இருக்கிறார் சசிகலா. அரசியல்ரீதியாகச் சில விஷயங்களை முடிவெடுப்பதற்கு அவரிடம் அனுமதி பெற்றேன்' எனப் பேட்டியளித்தார். இந்தச் சிறை சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்களை அவர் வெளியில் சொல்லவில்லை. அதேநேரம், இளவரசி குடும்பத்துக்கு எதிரான ஆயுதமாக இந்தச் சந்திப்பை அவர் பயன்படுத்திக்கொண்டார். 'தேர்தல் பிரசாரத்துக்காக ஒரு பைசாவைக்கூட விவேக் ஜெயராமன் கண்ணில் காட்டவில்லை. வயதுக்கேற்ற பக்குவத்தோடு அவருக்கு நடந்துகொள்ளத் தெரியவில்லை' என விளக்கியிருக்கிறார். இதற்குச் சசிகலாவிடமிருந்து எந்தப் பதிலும் வராததால், 'மௌன விரதம் இருக்கிறார்' என்றதோடு முடித்துக்கொண்டார் தினகரன். 

விவேக் ஜெயராமன்இதன்பிறகு, தன் ஆதரவாளர்கள் மூலம் சசிகலாவின் கவனத்துக்குச் சில தகவல்களையும் கொண்டு சென்றிருக்கிறார். இதன் விளைவுகளை ஜனவரி 3-ம் தேதி அனுபவித்தார் ஜெயா டிவி நிர்வாகி விவேக் ஜெயராமன். சிறைச் சந்திப்பில் பேசிய சசிகலா, 'மிகவும் இக்கட்டான சூழலில் இந்த வெற்றியைத் தினகரன் பெற்றிருக்கிறார். நீதான் பார்த்து நடந்துகொள்ள வேண்டும்' எனக் கூறியிருக்கிறார். தினகரனுக்கு ஆதரவாகச் சசிகலா பேசியதை எதிர்பார்க்காத விவேக், 'உங்களுக்காகத்தான் இவ்வளவும் செய்தேன். கெட்டப்பெயரோடு இருப்பதற்குப் பதிலாகப் பொறுப்புகளிலிருந்து விலகிக்கொள்கிறேன்' எனக் கோபத்தோடு கூறிவிட்டு வெளியே வந்தார். இந்நிலையில், கடந்த ஓரிரு நாள்களாக ஜெயா டிவி நிர்வாகத்தைக் கைப்பற்றும் வேலைகளில் முனைப்புக் காட்டத் தொடங்கியிருக்கிறது தினகரன் குடும்பம். "விவேக் ஜெயராமனைத் தூக்கிவிட்டு, தன்னுடைய மனைவி அனுராதாவைப் பதவிக்குக் கொண்டு வருவதுதான் தினகரனின் திட்டம். இதனால் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த குழப்பம் நீடிக்கிறது. விவேக்கால் பதவிக்குக் கொண்டுவரப்பட்டவர்களை ஒதுக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன" என விவரித்த கார்டன் நிர்வாகி ஒருவர், 

"சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்குச் சசிகலா செல்வதற்கு முதல்நாள், ஜெயா டிவி விவகாரத்தைக் கையில் எடுத்தார் தினகரன். காரணம், 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயா டிவி நிர்வாகத்தில் அனுராதா இருந்திருக்கிறார். 2011-ம் ஆண்டு சசிகலா குடும்பத்தில் உள்ளவர்களை ஜெயலலிதா நீக்கியபோது, அவர்களோடு சேர்த்து அனுராதாவும் நீக்கப்பட்டார். அதற்கு முன்னதாகத் தொலைக்காட்சி நிர்வாகத்தில் உள்ள கணக்கு வழக்கு குளறுபடிகளைப் பற்றியும் ஜெயலலிதா கவனத்துக்குச் சிலர் கொண்டு சென்றிருந்தனர். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மீண்டும் டிவி நிர்வாகத்தில் தலையெடுக்க விரும்பினார் அனுராதா. இதைப் புரிந்துகொண்டு சிறை செல்வதற்கு முதல்நாள் சசிகலாவிடம் பேசிய தினகரன், 'ஜெயா டிவி நிர்வாகத்தை யார் பார்த்துக்கொள்வது' என அனுராதாவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே கேட்டார்.

சசிகலாசற்றும் யோசிக்காமல், 'விவேக் பார்த்துக்கொள்ளட்டும்' எனக் கூறிவிட்டார் சசிகலா. இந்தப் பதிலை தினகரன் எதிர்பார்க்கவில்லை. இதுநாள் வரையில் ஜெயா டிவி நிர்வாகம் நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. வருமானம் கொழிக்கும் ஜாஸ் சினிமாஸ் மீது ஆசைப்படாமல், ஜெயா டிவி மீது தினகரன் கண் வைப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. சசிகலா குடும்பத்தின் நிதி போக்குவரத்துகளைக்  கட்டுப்படுத்தும் பொறுப்பை ஜெயா டிவி-யின் தலைமைப் பதவிக்கு வருபவர்கள்தாம் தீர்மானிக்கிறார்கள். கணக்கில் வராத கணக்குகளைக் கையாள்வதும் தலைமை நிர்வாகி மட்டும்தான். இப்படியொரு கோட் வேர்டு சசிகலா குடும்பத்துக்குள் இருக்கிறது. எனவே, ஜெயா டிவி வந்துவிட்டால், ஒட்டுமொத்த நிதி விவகாரங்களும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்துவிடும் எனக் கணக்குப் போடுகிறார் தினகரன்" என விவரித்து முடித்தார். 

இதையடுத்துப் பேசிய ஜெயா தொலைக்காட்சி நிர்வாகி ஒருவர், "கடந்த சில நாள்களாக, 'ஜெயா டிவி-யின் செய்திப் பிரிவில் உள்ள முக்கியமான ஒருவரை நீக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்து வருகிறார் தினகரன். இதைப் பற்றி டாக்டர் வெங்கடேஷிடம் பேசிய தினகரன், 'அந்த நபருக்கு விவரம் போதவில்லை. அரசியல்ரீதியாக எதையும் கையாளத் தெரியவில்லை. வேலையைவிட்டு நீக்குங்கள்' எனக் கூறியிருக்கிறார். இந்தத் தகவலை விவேக்கிடம் தெரிவித்திருக்கிறார் டாக்டர் சிவக்குமார். இதற்குப் பதிலளித்த விவேக், 'பிரச்னை அவரா... இல்லை நானா. அந்த நபர்மீது ஏதாவது குற்றச்சாட்டு இருந்தால் சொல்லுங்கள். உங்களுக்கு நான்தான் பிரச்னை என்றால் நேரடியாகச் சொல்லுங்கள்' எனக் கொந்தளித்துத் தீர்த்துவிட்டார். 'செய்திப் பிரிவில் உள்ள முக்கியமான நபரை நீக்க வேண்டும்' என அழுத்தம் கொடுத்து வருவது அனுராதா. அவருக்கு வேண்டிய ஒரு நபரை ஜெயா டிவி-யில் முன்னிறுத்த விரும்புகிறார். இந்தச் சண்டைதான் வேறு வடிவில் வெடித்துக்கொண்டிருக்கிறது. ஜெயா மற்றும் ஜாஸ் நிர்வாகத்துக்காகச் சில வேலைகளை ஒப்படைத்திருக்கிறார் விவேக். அந்தப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த மாத இறுதிக்குள் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் முடிவில் விவேக் இருக்கிறார்" என்றார் விரிவாக. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!