வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (09/01/2018)

கடைசி தொடர்பு:15:16 (09/01/2018)

ஒகி புயலின்போது எடுத்த நடவடிக்கைகள் என்ன? - முதல்வர் விளக்கம்

சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரின்ஸ் எம்.எல்.ஏ ஆகியோர் ஒகி புயல் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். 

பழனிசாமி


இதற்குப் பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “புயல்சின்னம் உருவாகும் முன்னே மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.  31-11-2017 அன்று வானிலை ஆய்வு மையத்தில் புயல்சின்னம்குறித்த தகவல் பெறப்பட்டது. அதன் பிறகு மாவட்ட வாரியாக புயல்குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. புயல் பாதித்த மாவட்டங்களில்  மீட்புப் பணிக்காக 11,986 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.  புயலால் கரை திரும்ப முடியாமல் தவித்த மீனவர்களில் 3,522 பேர் இதுவரை பத்திரமாகக் கரை திரும்பியுள்ளனர். வெளிமாநிலங்களில் கரையேறிய 1,741 மீனவர்கள் மீட்கப்பட்டனர். 

இறந்த 14 மீனவர்கள் குடும்பத்துக்கு தலாரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள் அல்லாத இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஒகி புயலை தேசியப் பேரிடராக அறிவிக்கப் பிரதமரை வலியுறுத்தியுள்ளேன். கடைசி மீனவர் கிடைக்கும் வரையில் தேடுதல் பணியைத் தொடர வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளோம். மத்தியக்குழுவின் ஆய்வுக்குப் பின்னர் ரூ.133 கோடியை முதற்கட்ட நிவாரணத் தொகையாக மத்திய அரசு விடுவித்துள்ளது. ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதர தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாதிக்கப்பட்ட ரப்பர், வாழை பயிர்களுக்கு ஹெக்டேர் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட்டது” என்றார்.