Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’’கங்கையைவிட 6 மடங்கு அதிக மாசு.... இனி விவசாயம் கஷ்டம்!’’ காவிரி பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட் #Cauvery

தென்னிந்தியாவின் முக்கியமான ஜீவ நதி, காவிரி. காவிரி ஆற்றை கர்நாடகம் நம்பியிருப்பதைவிட தமிழ்நாடு அதிகமாக நம்பியிருக்கிறது. இதற்குக் காவிரி டெல்டா மாவட்டங்களே சாட்சி. காவிரி டெல்டா பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் விவசாயம் செழிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தாலும், தமிழக விவசாயிகளாலும் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இதனைத் தமிழக அரசும், மத்திய அரசும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில், அரசு உதவியுடன் அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், காவிரி நீரானது கங்கை நதியைவிட 6 மடங்கு அதிகமாக மாசடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ஒவ்வொரு 25 கி.மீக்கும் இடைப்பட்ட தொலைவில் ஆண்டுக்கு மூன்று முறை எடுக்கப்பட்ட நீர் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் தண்ணீரில் கரையக்கூடிய திடக் கழிவுப் பொருள்கள் லிட்டருக்கு 753 மி.கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தரக்குழு நிர்ணயித்த அளவுபடி 500 மி.கி அளவு மட்டுமே திடப்பொருள்கள் இருக்கலாம் என வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

காவிரி ஆறு

இதுதவிர காவிரி ஆற்றில் கலக்கும் கழிவுகளில் அதிகமான அளவில் குளோரின், சோடியம் இருப்பதும் ஆய்வில் வெளியாகியுள்ளது. அளவுக்கு அதிகமாகக் கலந்த குளோரின் மற்றும் சோடியம் தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியாது. இதுதவிர, கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய வேதிப்பொருள்களும் அதிகமான அளவில் இருக்கின்றன. இதைக் குடிநீராகப் பயன்படுத்தினால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் எனவும் ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், ஜவுளி, சாயப்பட்டறைகள் மற்றும் சிமென்ட் ஆலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகளே. காவிரி ஆற்றிலிருந்து ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்புக்கு ஓராண்டுக்கு 76.9 டன் வீதம் நச்சு மற்றும் ரசாயனப் பொருள்கள் வங்கக்கடலில் கலக்கிறது. தென்னிந்தியாவில் பாயும் பெரிய நதிகளான கிருஷ்ணாவில் 37 டன்னும், கோதாவரியில் 67 டன்னாகவும் உள்ளன. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் மேகதாது, ஶ்ரீ ராமசமுத்திரம், கண்டியூர், அப்பகுடத்தான், ருத்திரப் பட்டினம் உள்ளிட்ட சில பகுதிகளில் நிலத்தடிநீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, காவிரிக் கரையோரப் பகுதிகளிலும் நிலத்தடிநீர் மிகவும் பாதிக்கப்பட்டு குடிநீராகப் பயன்படுத்தவும் தகுதியில்லாததாக ஆகிவிட்டது. காவிரி ஆற்றின் வளம் பாதிக்கப்படுவதற்கு முக்கியமான காரணம், ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் சுத்திகரிக்காமல் நேரடியாக ஆற்றில் கலப்பதுதான். கங்கையில் கலக்கும் மாசுகளைவிட 5 மடங்கு மாசுகள் அதிகமாகக் காவிரியில் கலக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான குடிநீர் பிரச்னையையும், விவசாய பிரச்னையையும் தீர்ப்பது காவிரி நதிதான். இப்போது இந்த நீரைப் பருகும் மக்களுக்கும் பல்வேறு விதமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

 

நொய்யல் ஆறு

கங்கை நதியைச் சீரமைக்க 20 ஆயிரம் கோடியில் சிறப்புத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், அதைவிட 6 மடங்கு அதிகமாக மாசடைந்துள்ள காவிரியைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு கண்டுகொள்ளாதது ஏனோ தெரியவில்லை. இதை எடுத்துச் சொல்ல தமிழக ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை. நொய்யலாற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால் ஆற்றில் நுரை பொங்குவதை, "மக்கள் சோப்பு போட்டுக் குளிப்பதாலும், துணி துவைப்பதாலும்தான் அதிக அளவில் நுரை ஏற்படும்" என்று விஞ்ஞான முறையில் விளக்கம் தந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உள்ள மாநிலம் அல்லவா இது?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ