சட்டமன்றத்துக்கு பூட்டு போட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்! புதுச்சேரியில் பரபரத்த 2 மணி நேரம்

புதுச்சேரியில், மாதந்தோறும் இலவச அரிசி மற்றும் பொங்கல் பொருள்கள் வழங்கப்படாததைக் கண்டித்து, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் சட்டமன்றத்தின் வாயிலை இழுத்துப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டதால், அவர்களிடம் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 'கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால், நாளைக்கே வழங்கப்படும்' என்று தெரிவித்தார். ஆனால், அதை ஏற்க மறுத்த எம்.எல்.ஏ-க்கள், 'ஆளுநர் உடனே ஒப்புதல் அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்' என்று கூறி, சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, போராட்டம்குறித்து சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அமைச்சர் கந்தசாமி தெரியப்படுத்தினார். இந்தப் போராட்டத்தின் காரணமாக, சட்டசபையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய  அன்பழகன், 'ஆளுநர் ஆட்சியாளர்கள் மோதலால் மாநிலத்தில் எந்தத் திட்டமும் நடைபெறவில்லை. மாநில வளர்ச்சி முற்றிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. தீபாவளியின்போது வழங்கவேண்டிய  இலவச சர்க்கரை இன்னமும் வழங்கப்படவில்லை. மாதந்தோறும் வழங்கவேண்டிய இலவச அரிசியும் வழங்கப்படவில்லை. ஆட்சியாளர்களின் தனிப்பட்ட மோதல்களால் மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்களை கேள்வி கேட்பதால், போராட்டம் நடத்தவேண்டியுள்ளது. அதனால் ஆளுநர் கிரண்பேடி, கோப்புகளுக்கு  அனுமதியளிக்க வேண்டும்' என்றார்.

அப்போது, அவர்கள் சட்டமன்றத்துக்கு வந்த முதல்வர் நாராயணசாமியிடம், “தேர்தல் கால வாக்குறுதிகளான  இலவச அரிசி, பொங்கல் பொருள்கள், வேட்டி சேலை திட்டத்தை ஏன் நிறைவேற்றமுடியவில்லை? அதற்காக பட்ஜெட்டில் ஏற்கெனவே நிதி ஒதுக்கியும் ஏன் அரிசி போடவில்லை. வாக்களித்த மக்கள்  எங்களைத்தான் கேட்கிறார்கள்” என்று கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, 'எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வெளிப்படையாக நிர்வாகம் செய்கிறோம்.   உங்களைவிட மக்கள்மீது எங்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது. இங்கு வந்து ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள் ? இதற்கு நாங்களா காரணம்? இலவச அரிசி, பொங்கல் பொருள்கள் வழங்குவதற்கான  கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பிவிட்டோம். ஒப்புதல் தர வேண்டியது ஆளுநர்தான். விரைவில் அனுமதி கிடைக்கும்' என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தனது அறையை விட்டு வெளியே வந்த சபாநாயகர் வைத்திலிங்கம், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம், 'எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம்' என்றுகூறி, அவர்களின் கையைப் பிடித்து தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அதையடுத்து, இரண்டு மணி நேர பரபரப்புப் போராட்டம் முடிவுக்குவந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!