வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (09/01/2018)

கடைசி தொடர்பு:17:00 (09/01/2018)

`மக்கள் போராட்டம் வெடிக்கும்!' - நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகக் கொந்தளிக்கும் வைகோ

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது பொட்டிபுரம் கிராமம். இயற்கை எழில் சூழ அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் மத்திய அரசு நியூட்ரினோ ஆராய்ச்சித் திட்டத்தை செயல்படுத்த முனைந்தது. இதற்கு எதிராக திரண்ட அப்பகுதி மக்கள் பெரும் போராட்டம் நடத்தி திட்டத்தை நிறுத்தினர். ஆனால், சமீப காலமாக மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த வேகம் காட்டிவருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இவ்விவகாரம் தொடர்பாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி வாங்காமல் திட்டப் பணிகளை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.  

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தொடுத்த வழக்கில், எந்தவிதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் வாங்கப்பட்ட "சுற்றுச்சூழல்" அனுமதியை 'தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்' தென்னக அமர்வு கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி ரத்துசெய்து தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. இந்திய அரசியல் அமைப்பு மாநிலங்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளின்படி, ஒரு மாநிலத்தில் எந்த மாதிரியான திட்டத்தை அனுமதிக்கலாம் என முடிவு எடுப்பது, மாநில அரசின் அரசின் உரிமை ஆகும். இதைக் கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசுத் துறைச் செயலர்களின் கூட்டம் நடைபெற்று அவர்களாகவே முடிவு எடுத்துக்கொண்டு, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்கள்.

தற்போது, நியூட்ரினோ திட்டத்தை 'சிறப்புத் திட்டமாக' (one of) பிரிவு 'B' திட்டமாக அறிவித்து, எல்லாத் தடைகளையும் நீக்கி,  "சுற்றுச்சூழல்" அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு செய்வது சட்டத்துக்குப் புறம்பான செயல் ஆகும். சட்டத்தை மதித்துக் கடைபிடிக்க வேண்டிய மத்திய அரசே, சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்க முயல்கின்றது. நியூட்ரினோவுக்கு எதிராக மக்கள் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள், இந்த நிலையில், மத்திய அரசு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் திட்டத்துக்கு அனுமதிவழங்கி பணிகளைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவோம்; போராட்டக் களத்தில் இறங்குவோம்" என்று எச்சரித்துள்ளார்.