வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (09/01/2018)

கடைசி தொடர்பு:15:13 (09/01/2018)

ஜெயலலிதா தீட்டிய திட்டத்தில் ஜெயலலிதா பெயரை நீக்கிய எடப்பாடி பழனிசாமி..!

'இதயதெய்வம், புரட்சித்தலைவி, மாண்புமிகு அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு' என்று முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சொல்லிக் கொண்டு, பணிக்குச் செல்லும் பெண்கள் இருசக்கர வாகனங்களுக்கான மானியத் திட்டத்தின் பெயரில் ஏற்கெனவே சொன்ன 'அம்மா' என்ற பெயரை நீக்கியிருப்பது, அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்லாது, மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்றக் கூட்டம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் நேற்று தொடங்கியது. 2018-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையாற்றினார். அவர் உரையில், தமிழக அரசின் வரும் ஆண்டுக்கான செயல்திட்டங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. ஆளுநர் உரையின் முக்கிய அம்சமாக 39-வது அறிவிப்பாக 46-வது பக்கத்தில், விரைவில் தொடங்கப்பட உள்ள, 'பெண்களுக்கு இருசக்கர வாகனம் மானியம் வழங்கும் திட்டத்தின்' கீழ், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட உதவித்தொகையின் உச்சவரம்பு, 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ன் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றதும் போடப்பட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான இருசக்கர வாகன மானியத்திற்கானது.

அதில், ''பணியிடங்களுக்கும் பிற வேலைகளுக்கும் மகளிர் எளிதில் செல்லும்வகையில், அவர்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க ஐம்பது சதவிகித மானியம் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க ஐம்பது சதவிகித மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ. 20,000 வழங்கப்படும். மகளிரின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டிருந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் நினைவாக இத்திட்டம், 'அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்' என அழைக்கப்படும். ஆண்டொன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

எடப்பாடி அறிவிப்பு

இதையடுத்து, இந்த அறிவிப்புக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் (நிலை எண்:19/ 20.02.2017) அரசாணை வெளியிடப்பட்டது. அதில், ''மகளிர் இருசக்கர வாகனம் வாங்க 50 விழுக்காடு மானியம் வழங்கும் திட்டத்தினை, 'அம்மா இருசக்கர வாகனத் திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தவும் 50 சதவிகித மானியம் அல்லது ரூ.20,000 ; இவற்றில் எது குறைவோ அத்தொகையினை 2017-2018-ம் ஆண்டு முதல், ஒரு லட்சம் உழைக்கும் மகளிர்க்கு வழங்கலாம் எனவும் அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஒரு லட்சம் உழைக்கும் மகளிர்க்கு அத்தொகையினை வழங்கலாம். இத்திட்டத்திற்கென 200 கோடி ரூபாய் அனுமதிக்கப்படுகிறது'' என்று கூறப்பட்டிருந்தது. 

எடப்பாடி பழனிசாமி

கடந்தாண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்ட அரசாணையை, விரைவில் செயல்படுத்தப்போவதாகவும் அதற்கான மானியத்தொகையை 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்போவதாகவும், ஓராண்டு கழித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ஆற்றிய உரையில் அறிவித்துள்ளார். 'அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்' என்பதை ''பெண்களுக்கான இரு சக்கர வாகன மானியம் வழங்கும் திட்டம்'' என்று சொல்லியிருக்கிறார். இந்தத் திட்டத்திற்கு வைக்கப்பட்ட 'அம்மா' என்ற பெயரையே நீக்கி விட்டார்கள். தமிழக அரசு தயாரித்துக் கொடுக்கும் அறிக்கையைத்தான் ஆளுநர் தன் உரையாக சட்டமன்றத்தில் சம்பிரதாயமாக வாசிப்பார். இது முழுக்க, முழுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் அறிக்கைதான். மூச்சுக்கு முந்நூறு தடவை, 'மாண்புமிகு அம்மா அரசு' என்று சொல்லிக்கொள்பவர்கள், அவரின் பெயர் ஏற்கெனவே சூட்டப்பட்ட இருசக்கர வாகன மானியத் திட்டத்தை ஓராண்டுவரை   செயல்படுத்தாமல் இருந்துவிட்டு, தற்போது அந்தப் பெயரையே மாற்றியிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. 

ஆளுநர் உரை

இதுகுறித்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கும், 'தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன' உயர் அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள், ''இந்தத் திட்டத்தை அறிவித்து, ஓராண்டாகக் கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது அத்திட்டத்தை தூசிதட்டி எடுத்துள்ளனர். இருசக்கர வாகனம் (moped/ scooter) வாங்க மானியத் தொகையை அதிகரித்திருக்கிறார்கள். அதற்கு ஓர் அரசாணை விரைவில் வெளியிடப்படும். அத்திட்டத்தைச் செயல்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்படும். அதன் பின்னர்தான், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம். கடந்த ஆண்டு கொடுக்க வேண்டியதோடு, இந்த ஆண்டுக்கான ஒரு லட்சமும் சேர்த்து ஆகமொத்தம் இரண்டு லட்சம் இரு சக்கர வாகனங்கள் மானிய விலையில் கொடுக்கவிருக்கிறோம். அவற்றுக்கான மானியத் தொகையாக 500 கோடி ரூபாய் தேவைப்படும். வரும் பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்பகட்ட வேலைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்'' என்றனர்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் இருசக்கர மானியம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று சொல்கிறார்கள். 'அம்மா' பெயர் இல்லாமல் இரு சக்கர வாகனத் திட்டம் ஓராண்டு கழித்து இப்போது வேகமெடுத்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்