வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (09/01/2018)

கடைசி தொடர்பு:15:36 (09/01/2018)

'அண்ணன் வருகிறார்.... அரசியல் பேசுவார்..!' எதிர்பார்ப்பு கிளப்பும் எம்.நடராஜனின் பொங்கல் விழா

எம்.நடராஜன் பொங்கல் விழா

ஒவ்வோர் ஆண்டும் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் தஞ்சையில், 'தமிழர் கலை இலக்கியத் திருவிழா' எனும் பெயரில் பொங்கல் விழாவினை விமரிசையாக நடத்தி வருகிறார். இந்தப் பொங்கல் விழாவில் நடராஜன், அரசியல் குறித்து பொங்கித் தீர்ப்பது வழக்கம். 

தஞ்சாவூரில் உள்ள தனக்குச் சொந்தமான தமிழரசி மண்டபத்தில்தான், பொங்கல் விழாவை பல ஆண்டுகளாக  நடத்தி வருகிறார் நடராஜன். மூன்று நாள்கள் மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து கூட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள். கலை நிகழ்ச்சி, மேஜிக் ஷோ, பட்டி மன்றம், வெளிநாட்டு அழகிகளின் நடனம் என மூன்று நாள்களும் கலகலப்பாக நடக்கும். அறுசுவை விருந்துடன், அதிரடியான அரசியல் முடிவுகளும், அரசியல் காமெடிகளுக்கும் கூட விழாவில் பஞ்சமிருக்காது.

எம்.நடராஜன் திவாகரன்

2011 டிசம்பரில் அ.தி.மு.க.விலிருந்து சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்ட அடுத்த மாதம் நடந்த பொங்கல் விழாவில், 'இதுவரை கட்டுண்டோம், பொறுத்​திருந்தோம். இனி, கட்டுப்பாடற்ற நடராஜனாக ஆகிவிட்டேன். சரியான நேரத்தில் முடிவெடுப்பேன்’ என்று வெடித்தார் நடராஜன். தொடர்ச்சியாகப் பொங்கல் விழாவில் அரசியல் வெடிகளைக் கொளுத்தி விடுவது நடராஜனின் பாணி. கடந்த ஆண்டு நடந்த பொங்கல் விழாவில், 'அ.தி.மு.க.வை உடைக்க சதி நடக்கிறது. என்ன செய்தாலும் உங்களால் அதிமுகவை உடைக்க முடியாது. ஆட்சியையும் உடைக்க முடியாது' என பி.ஜே.பி.க்குச் சவால் விடுத்தார்.

வழக்கத்துக்கு மாறாக கடந்த ஆண்டு விழாவில் திவாகரனும் பொங்கித் தீர்த்தார். "காவிரிப் பிரச்னையில் 360 டிகிரி உல்டா அடித்து பிரதமர் பின்வாங்குகிறார். ஜல்லிக்கட்டை அனுமதித்தால் அரசாங்கத்தைக் கலைத்துவிடுவோம் என்கிறார்கள். அநியாயம் நடந்துகொண்டிருக்கிறது. நாம்தான் ஒற்றுமையுடன் இருந்து வேரறுக்க வேண்டும். இது திராவிடர் கட்சி. ஆரியர் கட்சி அல்ல.’’ என்று அவரும் பி.ஜே.பி.யைச் சாடினார்.
மறுபுறம் அரசியல் காமெடிகளும் கூட விழாவில் அரங்கேறும். "உளவுப் பிரிவு நான் செல்போனில் பேசுவதை ஒட்டுக் கேட்கிறது அதனால் நான் இனிமேல் செல்போன் பயன்படுத்த மாட்டேன்" என்று அறிவித்தது; "இனி நான் கார் பயன்படுத்த மாட்டேன். மக்களோடு மக்களாக பேருந்திலேயே பயணிக்கப் போகிறேன்' எனச்சொல்லி, தான் பயன்படுத்திய கார்களை மேடையிலேயே ஏலம் விட்டு, பின்னர் நடந்தே அவர் இல்லத்துக்குச் சென்றது; நேரடி அரசியலுக்கு வரலாமா வேண்டாமா எனக் கருத்துக் கேட்டது என இந்த விழாவில் நடந்த காமெடிகளும் எக்கச்சக்கம்.

எம்.நடராசன்

தி.மு.க. ஆட்சி என்றால் எந்தச் சிக்கலும் இல்லாமல் விழாவை நடத்தி விடும் நடராஜனுக்கு, அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் விழா நடத்துவது என்பது பெரும் சிக்கலையே கொடுத்து வந்தது. இந்த விழா மேடையில், தன் மனதில் உள்ளதை கொட்டித்தீர்க்கும் நடராஜன், அதனால் சிக்கலில் சிக்கிக் கொள்வதும் வாடிக்கை. ஆனால், இதை எதையும் கண்டுகொள்ளாமல்  விழாவினை உற்சாகமாகவே நடத்தி வருகிறார். 

எம்.நடராஜன்இந்தாண்டு ஆட்சி, அதிகாரம், கட்சி என எதுவும் சசிகலா குடும்பத்தினரிடம் இல்லை. சசிகலா சிறையில் இருக்கிறார். நடராஜன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருக்கிறார். இதனால் இந்தாண்டு பொங்கல் விழா நடக்குமா, அப்படி நடந்தால் அதில் நடராஜன் பங்கேற்பாரா என்பதும் சந்தேகமாக இருந்தது. பொங்கல் பண்டிகை என்றால் சில தினங்களுக்கு முன்னரே தஞ்சை பரபரக்கும். தஞ்சை நகர் முழுக்க நடராஜனின் படங்கள் போட்ட ஃப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கும். விழா அழைப்பிதழ் வழங்கும் பணித் தொடங்கி, விழாவுக்கான முன்னேற்பாடுகள் இந்நேரம் தீவிரமடைந்திருக்கும்.

ஆனால் இந்தாண்டு தஞ்சை அமைதியாக இருக்கிறது. இதுவரை விழாவுக்கான எந்த ஏற்பாடுகளும் தொடங்கப்படவில்லை. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தால் ஆறு மாதமாவது நிச்சயமாக ஓய்வெடுக்க வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலும், 'இனிமேல் உடல்நிலைதான் முக்கியம். ஓய்வெடுங்கள்' என்ற சசிகலாவின் வார்த்தைகளாலும் நடராஜன் விழாவில் பங்கேற்க மாட்டார் என்றே தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், தற்போது பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கியிருக்கின்றன. இது தொடர்பாக நடராஜன் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். "கடந்த அக்டோபர் மாதம் அண்ணன் (நடராஜன்) உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னைக் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்குச் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு  நீண்ட நாள்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி வந்தார்கள்.

அதன்படியே வெளியே எங்கும் செல்லாமல் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால்தான் பொங்கல் விழா ஏற்பாடுகள் கொஞ்சம் தாமதமாக தொடங்கியுள்ளன. அழைப்பிதழ், போஸ்டர்கள் அடிப்பது என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்துவது என அனைத்துப் பணிகளும் நடந்து வருகின்றன. இவை அனைத்தும் அவரின் நேரடிப் பார்வையில்தான் நடக்கிறது. எப்போதும் போல பிரமாண்டமாக இந்த விழா நடக்கும். பழைய உற்சாகத்தோடும், அதே வேகத்தோடும் அண்ணன் பங்கேற்பார். அண்மைக்கால அரசியல் குறித்துப் பேசுவார்," என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்