வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (09/01/2018)

கடைசி தொடர்பு:15:43 (09/01/2018)

தி.மு.க எம்.எல்.ஏ கொடுத்த நொறுக்குத்தீனிக்கு `நோ’ சொன்ன தினகரன்!

டிடிவி தினகரன்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில், ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.,  டி.டி.வி.தினகரன் பங்கேற்றுவருகிறார். அவருக்கு 148-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் முதல் முறை சட்டப்பேரவைக்கு தேர்வானபோது, அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன், இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, தி.மு.க எம்.எல்.ஏ., பிரகாஷ், தான் கொண்டுவந்திருந்த நொறுக்குத் தீனியை அருகே அமர்ந்திருந்த சக உறுப்பினர்களுக்கு வழங்கினார். தினகரனுக்கும் அவர் நீட்டினார். ஆனால், தினகரன் தனக்கு வேண்டாமென்று மறுத்துவிட்டார். 

இந்த நிகழ்வு, வேறு பல ஞாபகங்களைக் கிளப்பிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். சிறிது நாள்களுக்குப் பின், அவரைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, முதல்வராகப் பதவியேற்க சசிகலா முயன்றார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் 'தர்மயுத்தம்' தொடங்கினார். இதனால், அ.தி.மு.க துண்டானது. 

ஓ.பன்னீர்செல்வத்தைப் பதவியிலிருந்து இறக்குவதற்குக் காரணமாக, சசிகலா சொன்ன 'சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரும், முதல்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தனர்' என்ற டயலாக், சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. தினகரன், தி.மு.க எம்.எல்.ஏ-விடமிருந்து நொறுக்குத்தீனியை வாங்க மறுத்தது, இவற்றையெல்லாம் நினைவுபடுத்தியது. 

தினகரன், இன்று தன்னைப் பேச அனுமதிக்கவில்லையென்று கூறி, அவையிலிருந்து வெளிநடப்புசெய்தார்.