வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (09/01/2018)

கடைசி தொடர்பு:17:20 (09/01/2018)

'பெண்பிள்ளைகள் படும் பாடு'- பரிதவிக்கும் பெற்றோர்கள்

'இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கொடுமை நீடிக்கும்னு தெரியலியே. பொம்பளப் புள்ளைகளைப் படிக்க ஸ்கூலுக்கு அனுப்பி வெச்சுட்டு, உயிரோட திரும்புமானு வயித்துல நெருப்பைக்கட்டிகிட்டு காத்திருக்கோம். புள்ளைங்க முகத்தைப் பார்த்த பிறகுதான் எங்க மூச்சுக்காத்து ஆசுவாசமாகுது' என்று  பரிதாபமாகச் சொல்கிறார்கள் பெற்றோர்கள்.

ஆறாவது நாளாக நீடித்துவரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தின் விளைவாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துன்பங்களை மக்கள் அனுபவித்துவருகிறார்கள். அதில் பிரதானமாக இருப்பது, பெண்பிள்ளைகள் படும் பாடுகள்தான். அவர்கள் பள்ளிக்குச் சென்று திரும்புவதுவதற்குள் போதும்போதுமென்றாகிவிடுகிறது. காரணம், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓடும் தனியார் பேருந்துகள் பலவும் அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. கிராமங்களிலிருந்து அருகில் உள்ள நகரங்களுக்குச்சென்று படிக்கும் பள்ளி மாணவிகள், இந்தப் பேருந்துக்களில்தான் பயணித்தாக வேண்டும். இதனால், பள்ளி மாணவிகள் படும் சிரமங்கள் வெளியில் சொல்லமுடியாத அவலங்கள் நிரம்பியதாக இருக்கிறது. "அடுத்த வருஷமாவது, வேன் வசதி உள்ள ஸ்கூலில் சேரும்மா. இப்படி தினமும் பஸ்ல போயிட்டு வர்றது ரொம்பக் கொடூரமா இருக்கும்மா'னு எங்க புள்ளைங்க கண்ணைக் கசக்கிக்கொண்டு நிற்கும்போது, அவங்க என்ன மாதிரியான சங்கடங்களைத் தினமும் அனுபவிக்கிறாங்கனு சொல்லாமலேயே புரிஞ்சுடுது.

சாதாரண நாள்களில் ரெண்டு பஸ்ல போகவேண்டிய கூட்டம் ஒரே பஸ்ல போகும். ஆனா இப்போ, ஒவ்வொரு பஸ்லேயும்  அஞ்சு பஸ்ல போற கூட்டம் போவுது. இந்தக்கூட்டத்துல மாட்டிகிட்டு எங்க புள்ளைங்க படுற பாடு ரொம்பக் கொடுமையா இருக்குங்க. அய்யா அமைச்சருங்களே... அதிகாரிங்களே, உங்களை கையெடுத்துக் கும்பிடுறோம்யா. இப்படியான பாதிப்புகளை ஸ்கூல் படிக்கிற பொம்பளப் புள்ளைங்க அனுபவிக்கிற அவலத்தையும் கணக்கில் எடுத்துகிட்டு சீக்கிரமா, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துடுங்கய்யா ?' என்று வேதனையின் விளிம்பில் நின்று புலம்புகிறார்கள் பெற்றோர்கள்.

இதுகுறித்து, 'கம்யூனிஸ்ட்  மக்கள் விடுதலை கட்சி'யின் (cpml) புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் விடுதலை குமரன் பேசும்போது, "இந்த மாதிரி கொடுமைகளைத் தினமும் பள்ளிக்குச் செல்லும் பெண்பிள்ளைகள் தமிழ்நாடு முழுக்க அனுபவித்துவருகிறார்கள். பெற்றோர்கள் போன்செய்து சொல்லும்போது, கண்கள் கலங்கிவிடுகிறது. பஸ் ஓடலேன்னா, வியாபாரிகள், வேலைக்குச்செல்பவர்கள், பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற பொது புத்தியில், புரையோடிக்கிடப்பதையே  மறுபடி மறுபடி பேசுகிறோம். ஆனால், பள்ளிக்கு பஸ்ஸில் சென்று வரும் பெண்பிள்ளைகள் சந்தித்துவரும் வெளியில் சொல்ல முடியாத சங்கடங்களைப் பேசுவதில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை, தனியார் பேருந்துகள் அதிக கிராமங்களை இணைக்கின்றன. அரசுப் பேருந்துகளில்  இலவச பாஸ் கொண்டு பள்ளிக்குச்சென்று வந்த மாணவிகள், இப்போது பணம்கொடுத்து இந்தத் தனியார் பேருந்துகளில் பள்ளிக்குச் சென்றுவருகிறார்கள். அவர்கள் படிப்பு பாதிக்கவில்லை என்று மகிழும்போதே, பாலியல்ரீதியான தொல்லைகள் பிள்ளைகளைத் துன்படுத்தி, பெற்றோர்களையும் துயரப்படுத்துகின்றன. எனவே, அரசு இந்தக் குரல் அற்ற மாணவிகள் சந்திக்கும் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு மிகவிரைவாக போக்குவரத்துத்தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை  முடிவுக்குக்கொண்டு வர வேண்டும்" என்றார்.