இடது கையில் செல்போன்... வலது கையில் கியர்..! பயணிகளைப் பதறவைத்த தற்காலிக ஓட்டுநர்

ஆத்தூரில் செல்போன் பேசிக்கொண்டே அரசுப் பேருந்தை ஓட்டும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. இதனால் பொது மக்கள் அரசுப் பேருந்தில் பயணிக்கவே அச்சப்படுகிறார்கள்.

தற்காலிக டிரைவர்களால் தமிழகத்தில் பல இடங்களில் விபத்துகளும் உயிரிழப்புகளும் நடந்துகொண்டு இருக்கின்றன. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் அரசுப் போக்குவரத்துக் கழக டெப்போவிலிருந்து ஆத்தூர் செல்லும் அரசுப் பேருந்தை ஆர்.டி.ஓ அறிவழகன் ஏற்பாட்டில் தற்காலிக டிரைவர் ஒருவர் ஓட்டிச் சென்றிருக்கிறார். வீரகனூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்துகொண்டிருந்தபோது டிரைவருக்குப் போன் வந்திருக்கிறது. உடனே அவர் ஸ்டேரிங்கைவிட்டு பாக்கெட்டிலிருந்து போனை அசால்ட்டா எடுத்து இடது கையில் வைத்து செல்போனைப் பேசிக்கொண்டே வலது கையால் கியரை மாற்றி மாற்றி பல கிலோமீட்டர் தூரத்துக்குப் பேருந்தை ஓட்டி வந்துள்ளார். பின்பு  உடும்பியம் என்ற ஊரில் வந்தபோது இடது கையில் வைத்திருந்த செல்போனை ஸ்டேரிங்கை விட்டுவிட்டு வலது கைக்கு மாற்றும்போது பேருந்து ஒரு சைடாக இழுத்துக்கொண்டுச் சென்றது. பின்னர், ஓட்டுநர் சுதாரித்துப் பிடித்துக்கொண்டார். அப்படியும் அந்தப் போனை வைக்காமல் தலையைச் சாய்த்துக்கொண்டு பேசியவாரே பேருந்தை ஓட்டி வந்தார்.

இதைக் கண்ட பயணிகள் மிகுந்த அச்சத்துடனும் ஆத்திரத்துடனும் பயணம் செய்தனர். வேப்பந்தட்டை என்ற இடத்துக்குப் பேருந்து வந்தபோது செல்போன் பேசுவதை நிறுத்தாமல் இருப்பதைக் கண்ட பயணிகள் பலர் கீழே இறங்கிக்கொண்டனர். டிரைவரின் செயலை ஒரு பயணி செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளார். தற்காலிக ஓட்டுநரின் செயலால் அச்சத்துடன் பயணித்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தலையில் அடித்துக்கொள்கின்றனர் பொதுமக்கள்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!