வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (09/01/2018)

கடைசி தொடர்பு:17:35 (09/01/2018)

குடும்பத்தோடு போராட்டத்தில் குதித்த போக்குவரத்துத் தொழிலாளர்கள்!

போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஈடுபட்டுவருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில்  60 சதவிகித அரசுப் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 பணிமனைகளில் உள்ள 740  பேருந்துகளில், தற்போது 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் தினக் கூலி அடிப்படையிலான ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இதனால், முக்கிய நகரங்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிராமப்புறங்களுக்கான பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் பகுதியில் மூன்று அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்திருக்கிறன.

காஞ்சிபுரம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவத்து ஊழியர்களின் குடும்பத்தினரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை முற்றுகையிடப் போவதாக வந்த தகவலையடுத்து  300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பேருந்து நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். காவலர்கள் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பதற்றம் நிலவுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க