`யாரும் பார்க்காதபோது ஓர் அமைச்சர் வணக்கம் போட்டார்!’ - ரகசியம் உடைத்த தினகரன்

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாளான இன்று பேரவையிலிருந்து சுயேச்சை எம்.எல்.ஏ  டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு செய்தார். பேச அனுமதியளிக்கப்படாததால் வெளிநடப்பு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

 

தினகரன்
 

சட்டப்பேரவை வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தன்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்ததாகப் போட்டுடைத்தார். இது எடப்பாடி - பன்னீர் அணியில் கண்டிப்பாகக் குழப்பத்தை ஏற்படுத்தும்.

dinakaran
 

சட்டப்பேரவையில் நிலவரம் குறித்து பேசிய தினகரன், ‘பேரவைக்குள் நான் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறேன். தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நட்பாக என்னிடம் பேசுவார்கள். அதைத் தவறாகச் சித்திரித்து, தி.மு.க-வுடன் சேர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேசினால்தான் குறை சொல்கிறார்கள் என்றால், அ.தி.மு.க உறுப்பினர்களுடன் பேசுவதையும் கண்காணிக்கிறார்கள். யாரும் பார்க்காதபோது எடப்பாடி-பன்னீர் அணியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் சொன்னார். காலையில் பேரவை வெளியே என்னைப் பார்த்த இரண்டு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பதறியடித்து பேரவைக்குள் சென்றுவிட்டார்கள்’ என்று கேஷுவலாகச் சொன்னார் தினகரன்.

ஏற்கெனவே ஸ்லீப்பர் செல்கள் விரைவில் வெளியே வருவார்கள் என்று தினகரன் கூறியிருந்தார். தற்போது `சட்டப்பேரவையில் யாரும் பார்க்காதபோது ஓர் அமைச்சர் வணக்கம் சொன்னார்’ என்று தினகரன் தெரிவித்திருப்பது எடப்பாடி-பன்னீர் தரப்புக்கு கலக்கத்தைக் கொடுக்கும். வணக்கம் சொன்ன அமைச்சர் யார் என்று செய்தியாளர்கள் ஆர்வமாகத் தினகரனைக் கேட்டனர். சிரித்துக்கொண்டே யார் என்பதைக் குறிப்பிடாமல் மழுப்பிவிட்டார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!