ராமஜெயம் கொலை வழக்கை கையில் எடுத்தது சி.பி.ஐ! ஆரம்பமே அதிரடி விசாரணை

திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012 மார்ச் மாதம் 29-ம் தேதி கல்லணைப் பகுதியில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டு, அவரின் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கை, தமிழக காவல்துறை, சி.பி.சி.ஐ.டி, முதல்வர் தனிப்படை எனப் பல போலீஸார் விசாரித்தனர். அடுத்து திருச்சி மாநகரப் போலீஸார் 8 தனிப்படைகளை அமைத்து விசாரணைத் தொடங்கியது.

அடுத்து, இந்தக் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி வசமானது. கடந்த ஐந்தாண்டுகளாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் நடத்திய விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், கடந்த 2014 டிசம்பர் 10-ம் தேதி ராமஜெயத்தின் மனைவி லதா ராமஜெயம், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் அவகாசம் கேட்டு இழுத்தடித்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இதன்காரணமாக இதுவரை ராமஜெயம் கொலை வழக்கில் திருச்சி மாநகரக் காவல்துறை மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சேகரித்த சுமார்  1,100 சாட்சிகள், சுமார் 275-க்கும் மேலான வாகன உரிமையாளா்களிடம் சேகரிக்கப்பட்ட விசாரணையின் அறிக்கை, ராமஜெயம் கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள செல்போன் டவரில் பதிவான சுமார் 2,910 செல்போன் எண்கள் உள்ளிட்ட ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி வசம் இருந்த அனைத்துக் கோப்புகளும் கடந்த மாதமே சி.பி.ஐ வசம் கைமாறின. மேலும், இன்று சி.பி.ஐ அதிகாரிகள், விசாரணையைத் தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக அவர்கள் ராமஜெயத்தின் குடும்பத்தினர், உறவினர்களிடம் மீண்டும் விசாரிக்கப்போவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சி.பி.ஐ தொடங்கியுள்ள விசாரணை சூடுபிடிக்க உள்ள நிலையில் விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்கிற நம்பிக்கையில் உள்ளதாக ராமஜெயம் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!