வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (09/01/2018)

கடைசி தொடர்பு:18:00 (09/01/2018)

மகளுடன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற தாய்! பதறிய கலெக்டர் அலுவலகம்

தீ குளிப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாயும் மகளும் சொத்துத் தகராறு காரணமாகப் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கிருந்த செய்தியாளர்கள் தடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மதுரைப் பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவர் கணவர் ராமலிங்கம் இறந்துவிட்டார். மீனாட்சி தன் மகள் நர்மதாவுடன் வசித்து வருகிறார். மீனாட்சியின் கணவர் குடும்பத்துக்குச் சொந்தமான 4 சென்ட் இடம் பழங்காநத்தம் அருகே பைக்காராவில் உள்ளது. அவர் கணவரின் சகோதரர் ஹரிராமன் தன் கணவருக்குப் பாத்தியமான ஒன்றே கால் சென்ட் நிலத்தைப் பிரித்துக் கொடுக்காமல்,
சித்ரா என்ற பெண்மணியை ஏவிவிட்டுத் தொடர்ந்து தகராறு செய்தும், கொலை மிரட்டல் விடுத்தும் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர்.  மேலும், திருமணமான தன் மகள் நர்மதாவை அவர் கணவர் குடும்பத்தினர் நகை கேட்டு மகளைத் தனது வீட்டுக்கு அனுப்பி வைத்ததால் அந்த ஒன்றேகால் சென்ட் நிலத்தை விற்று நகை கொடுத்து அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால், வேதனை அடைந்த மீனாட்சி தன் மகள் நர்மதாவுடன்  இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டுத் தீக்குளிக்க முயன்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் தடுத்து அவர்களைப் பெண் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தாயும் மகளும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.