`கால்டாக்ஸிகளுக்குக் கட்டணம் நிர்ணயிப்பது யார்?' ஆர்.டி.ஐ கேள்வியால் அலறிய போக்குவரத்துத்துறை

கால்டாக்ஸி

கால்டாக்ஸி நிறுவனங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பது யார் என்று வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி ஆர்.டி.ஐ மூலம் தமிழக போக்குவரத்துத் துறைக்கு கேள்விகேட்டிருந்தார். அதுதொடர்பான எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை என்று பதிலளித்துள்ளது போக்குவரத்துத்துறை.

 பாலாஜிசென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் சட்டப் பொறியாளருமான எஸ்.எஸ்.பாலாஜி, தமிழகப் போக்குவரத்துத்துறைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஐ மூலம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அதில், குறிப்பாக மொபைல் ஆப்ஸ் மூலம் கால்டாக்ஸிகளை முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணம் யாரால் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட மொபைல் ஆப்ஸ் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விகளைக் கேட்டுள்ளார். அதில், தமிழகப் போக்குவரத்துத்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் அதுதொடர்பாக எங்களிடம் எந்தவித பதிலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. 
இதுகுறித்து சட்டப்பொறியாளர் எஸ்.எஸ்.பாலாஜி கூறுகையில், "மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சகத்திடம் கடந்த 2016-ம் ஆண்டு டாக்ஸி பாலிசி தொடர்பான குழு அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அதில், மொபைல் ஆப்ஸ் மற்றும் கட்டணம் நிர்ணயம் குறித்த தகவல்கள் உள்ளன. அறிக்கையை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் அதைத் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் மொபைல் ஆப்ஸ் டாக்ஸி நிறுவனங்கள், விருப்பம்போல கட்டணத்தை வசூலிக்கின்றனர். 
 தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதை வசூலிக்கும் ஒவ்வோர் ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. அதுபோலத்தான் மொபைல் ஆப்ஸ் கட்டண விவகாரத்திலும் தமிழகப் போக்குவரத்துத்துறை அக்கறை செலுத்த வேண்டும். மொபைல் ஆப்ஸ் கால்டாக்ஸி நிறுவனங்கள் ஆப்ஸ் தரத்தை ஆய்வு செய்யப்பட்டு ஸ்டாண்டர்டு டெஸ்டிங் மற்றும் குவால்டி சான்றிதழை (எஸ்.டி.ஓ.சி) பெற வேண்டும். ஆனால், எந்த மொபைல் கால்டாக்ஸி நிறுவனங்களின் ஆப்ஸ் தமிழகத்தில் ஆய்வு செய்யப்படவில்லை என்பதை விளக்கும் வகையில்தான் தமிழகப் போக்குவரத்துத் துறையின் ஆர்.டி.ஐ பதில் இருக்கிறது. 
பொதுவாக, 4 மீட்டர் நீளமுள்ள வாகனங்களைப் பயன்படுத்தும்போது அதற்கு கட்டணம் கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட வேண்டும். 4 மீட்டருக்கு அதிகமுள்ள வாகனங்களுக்கு இது பொருந்தாது. எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் மொபைல் ஆப்ஸ் மூலம் இயங்கும் கால்டாக்ஸிகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அவ்வாறு நிர்ணயிக்கப்பட்டால், கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மொபைல் ஆப்ஸ் நிறுவனங்களுக்கு கடிவாளம் போட முடியும். மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணிக்க வழிவகை கிடைக்கும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!