வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (09/01/2018)

கடைசி தொடர்பு:17:04 (09/01/2018)

தமிழக அரசுக் காலண்டரில் பிரதமர் மோடி!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட காலண்டரில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

காலண்டர்


தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆண்டுதோறும் அரசுக் காலண்டரை வெளியிடுவது வழக்கம் அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அது முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் படமாகும். அதே பக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிற்கும் புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தமிழக அரசு மத்திய அரசை அனுசரித்துப்போவதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு திட்டத்தையும் மத்திய அரசின் மனம் கோணாமல் நிறைவேற்ற தமிழக அரசு முயன்றதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. அது ஒருபுறமிருக்க தமிழக ஆளுநர் மாநிலம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்வதும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கொந்தளித்து வருகிறார்கள். 

இந்நிலையில், அரசுக் காலண்டரில் பிரதமரின் படம் இடம்பெற்றிருப்பது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தக் காலண்டர்கள் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.