வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (09/01/2018)

கடைசி தொடர்பு:18:20 (09/01/2018)

`சகாயம் வந்தால் சரியாகிவிடும்' - போக்குவரத்துத் தொழிலாளர்களின் திடீர் கோரிக்கை

சகாயம் பேனரோடு போக்குவரத்து ஊழியர்கள்

‘எங்கள் பிரச்னையெல்லாம் தீர வேண்டுமென்றால் எங்களது துறையை நிர்வகிக்கும் அதிகாரி நேர்மையானவராகவும் ஊழியர்களின் நலன்மேல் அக்கறைகொண்டவராகவும் இருந்தால் மட்டுமே முடியும்.’ எனவே, எங்கள் துறைக்கு சகாயத்தை அனுப்புங்கள் என்று கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் புதுக் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

கடந்த 4-ம்தேதி, முதல் நடந்துவரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கு இப்போது வரை தீர்வு கிடைக்காததால் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள தலைமை டெப்போவில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தாரும் கலந்துகொண்டனர். அவர்கள்  ‘சீர்குலைந்து காணப்படும் போக்குவரத்துத் துறையில் நிகழும் தொடர் குழப்பங்களுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் போக்குவரத்துத்துறைச் செயலாளராக மாற்று...’ என்ற கோஷம் தாங்கிய ஃப்ளெக்ஸ்களை ஏந்திவந்தனர். அவர்களிடம் பேசினோம், “ஒரு லிட்டருக்கு 6 கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும் என்பதுவும் ஒரு கிலோ மீட்டருக்கு 20 ரூபாய் கலெக்‌ஷன் கொடுக்க வேண்டும் என்பதுவும் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கு. நாங்கள் இதை எட்டவில்லையென்றால், மறுநாள் ஜி.எம் அலுவலகத்துக்குப்போய் கைகட்டி  பதில் சொல்ல வேண்டும்.  கண்டபடி திட்டு வாங்குவது மட்டுமல்லாமல் எங்களின் புரொமோஷன் பாதிக்கும்படியும் செய்துவிடுவார்கள்.

 ஓட்டை பஸ்ஸை வைத்துக்கொண்டு நாங்கள் அனுவவிக்கும் கஷ்டத்துக்கு அளவே இல்லை. இதுநாள் வரை டார்கெட் வைத்து பஸ்ஸை ஓட்டச்சொன்னவர்கள் இந்த ஒருவாரமாக அப்படி எதுவும் செய்யவில்லை. இந்த மாவட்டத்தில் 90 சதவிகிதப் பேருந்துகள் இயங்கின. அந்த மாவட்டத்தில் 80 சதவிகிதப் பேருந்துகள் இயங்கின என்று ஏமாற்று அறிக்கைவிடுகிறார்கள். கேட்டால் பொதுமக்கள் சேவை என்று பொய் சொல்கிறார்கள். பல பேருந்து நிலையங்கள், பேருந்துத் தடங்கள், டெப்போக்கள் எனப் போகுவரத்துத்துறையின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வங்களில் அடமானத்தில் இருக்கின்றன. அதை மீட்கத் திராணி இல்லாத போக்குவரத்துத்துறை, போக்குவரத்து ஊழியர்களின் பணத்தையும் திருடி வைத்துக்கொண்டு தரமறுக்கிறது. இரவும் பகலும், வெயிலும் மழையும் பார்க்காமல் வேலை செய்யும் எங்கள் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத்  திருப்பித் தருவதற்கும் எங்களுக்கான ஊதியத்தை உயர்த்தித் தருவதற்கும் லாயக்கு இல்லாத  இந்தத் துறையை இப்படியே விட்டால் அரசுப் போக்குவரத்துச் சேவை மொத்தமாக முடங்கி மூடப்படும் நிலைக்குச் சென்றுவிடும். இவர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்போல. போக்குவரத்துக் கழகங்களைக் கடனில் மூழ்கடித்துவிட்டு தனியார் மயமாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் பேச்சுகளைப் பார்த்தால் அப்படிதான் தெரிகிறது. இந்தத் துறை மீட்கப்பட்டு நல்லமுறையில் செயல்பட வேண்டுமென்றால் இந்தத் துறைக்கு ஓர் நேர்மையான அதிகாரி வந்தால்தான் முடியும். ஆகையால், போக்குவரத்துத் துறைக்குச் செயலாளராகச் சகாயத்தை ஆக்குங்கள். அப்புறம் பாருங்கள் எவ்வளவு ஊழல்கள் வெளிவருகிறது என்றும் எப்படிச் செயல்படுகிறது போக்குவரத்துத்துறை என்றும்” நம்பிக்கையோடு சொல்கிறார்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க