வெளியிடப்பட்ட நேரம்: 19:01 (09/01/2018)

கடைசி தொடர்பு:19:01 (09/01/2018)

200 மடங்கு வரி உயர்த்திய நகராட்சி! பொங்கி எழுந்த அனைத்துக் கட்சியினர்

ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்தால் உயர்த்தப்பட்ட வீட்டு வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ராமேஸ்வரம் நகராட்சியை முற்றுகையிட்ட அனைத்து கட்சியினர்

ராமேஸ்வரம் நகராட்சிப் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், தங்கும் விடுதிகள் மற்றும் சொத்துகளுக்கான வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முன்னறிவிப்பு ஏதும் இன்றி இந்த வரி 200 மடங்கு அதிகரிக்கப்பட்டது. மேலும், உயர்த்தப்பட்ட இந்த வரியைப் பொதுமக்கள் 2013-ம் ஆண்டு முதல் முன் தேதியிட்டுச் செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. உயர்த்தப்பட்ட வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 10 நாள்களுக்கு முன் அனைத்துக்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இது குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் உயர்த்தப்பட்ட வரியைச் செலுத்துமாறு நகராட்சித் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ராமேஸ்வரம் நகராட்சி முற்றுகை
 

இதையடுத்து ராமேஸ்வரத்தில் அனைத்துக் கட்சியினர் சார்பில் வரி உயர்வை ரத்து செய்யக் கோரி ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். இதன்படி இன்று காலை நாசர்கான், ஜான்பாய் (தி.மு.க), சிவா, செந்தில்வேல், கருணாகரன் (சி.பி.எம்), முருகானந்தம் (சி.பி.ஐ), ராஜாமணி (காங்.), ஶ்ரீதர், சுந்தரவாத்தியார் ( பி.ஜே.பி), கண்.இளங்கோ (தமிழ் தேசிய இயக்கம்), பாஸ்கரன் (ம.தி.மு.க) மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பி.என்.சந்திரன், நாகராஜன் ஆகியோர் தலைமையில்  நூற்றுக்கணக்கானோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அங்கு பாதுகாப்புக்காக வந்த போலீஸார் நகராட்சி அலுவலக வாயிலைப் பூட்டியதுடன் தடுப்புகள் வைத்து மறைத்து இருந்தனர். இதனால் நகராட்சி அலுவலகம் முன் உள்ள சாலையில் அமர்ந்த அனைத்துக் கட்சியினர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்துக் கோஷமிட்டனர். இதையடுத்து நகராட்சி மேலாளர்  போராட்டம் நடத்தியவர்களிடம் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டு உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.