வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (09/01/2018)

கடைசி தொடர்பு:19:40 (09/01/2018)

"அச்சகத்தை மூடக் கூடாது": கோவையில் கடையடைப்புப் போராட்டம்!

கோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

அச்சகம்

கடந்த 1964-ம் ஆண்டு, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் மற்றும் காமராஜர் ஆகியோரின் முயற்சியால், கோவை, பிரஸ்காலனியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின்கீழ், அரசு அச்சகம் தொடங்கப்பட்டது. சுமார் 132 ஏக்கரில் அமைக்கப்பட்ட இந்த அச்சகத்தில், 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்தனர். ஆனால், அச்சகத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்து, தற்போது 66 நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் 45 ஒப்பந்தப் பணியாளர்களுடன் அச்சகம் இயங்குகிறது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இலக்கை பூர்த்திசெய்து, ரூ.1.5 கோடி லாபம் ஈட்டிவருகிறது.

இந்நிலையில், நாட்டிலுள்ள 17 அச்சகங்களை 5 ஆகக் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கோவை, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இயங்கிவரும் அச்சகங்கள் மூடப்பட்டு, அவற்றின் பணிகள் நாசிக்கில் உள்ள அச்சகத்தோடு இணைக்க மத்திய அமைச்சரவை முடிவுசெய்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இதையடுத்து, கோவை அச்சகத்தை மூடக் கூடாது என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது. இந்நிலையில், வருகிற 15-ம் தேதியுடன், கோவை அச்சகம் மூடப்படும் என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. மேலும், அச்சகத்தில் பணிபுரிந்துவரும் 36 ஊழியர்களையும், நாசிக்கில் உள்ள அச்சகத்தில் பணியில் சேர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

கோவை, பெரியநாயக்கன்பாளையம், பிரஸ்காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் முழு கடையடைப்புப் போராட்டம் நடந்தது. அனைத்துக் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தக் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. 
இதனிடையே, அச்சகத்தை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடக்கும் கடையடைப்புப் போராட்டத்துக்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.