வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (09/01/2018)

கடைசி தொடர்பு:20:20 (09/01/2018)

அஷ்டமி சப்பர தினத்தில் பக்தர்களுக்கு படியளந்த ஶ்ரீ ராமநாதசுவாமி

ராமேஸ்வரத்தில் அஷ்டமி சப்பர தினமான இன்று ஶ்ரீ ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குப் படியளந்தனர்.

ராமேஸ்வரத்தில் நடந்த அஷ்டமி சப்பர வீதிஉலா

ஆண்டுதோறும் உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் பரமேஸ்வரனே நேரில் சென்று படியளக்கும் தினத்தை அஷ்டமி சப்பர தினமாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அஷ்டமி சப்பர தினம் இன்று கொடாடப்பட்டது. இதையொட்டி ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் - பிரியாவிடை, விநாயகர், முருகன் உள்ளிட்டோருடன் திருக்கோயிலிலிருந்து தங்க ரிஷப வாகனங்களில் ரதவீதி, கிழக்குக் கடைத் தெரு, வர்த்தகன் தெரு, ராமர்தீர்த்தம், திட்டக்குடி, நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு எழுந்தருளி படியளந்தார். படியளக்க வந்த ஶ்ரீராமநாதசுவாமிக்கு இப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர். 

இதையொட்டி இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் ஸ்படிக லிங்க பூஜையும் பின்னர், அதிகாலை அபிஷேக ஆராதனையும் நடந்தன. அவற்றைத் தொடர்ந்து அஷ்டமி சப்பர வீதி உலாவுக்கு சுவாமி புறப்பாடு சென்றதால் கோயில் நடை சாத்தப்பட்டது.